அண்ணாமலை 30! #30YearsofAnnamalai

அண்ணாமலை 30! #30YearsofAnnamalai

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களால் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத படம்… நினைவுகளில் என்றும் பசுமையாக நிலைத்த படம் என்றால் அது அண்ணாமலைதான். ரஜினியின் திரையுலக வரலாற்றையே அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்குப் பின் என்றுதான் சொல்வார்கள் திரைத்துறை விற்பன்னர்கள். விமர்சகர்கள், திரைத்துறை வர்த்தகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களைத் தாண்டிய பொதுமக்களை பெரிதும் மகிழ்வித்த படம் அண்ணாமலை.

அந்த பால்கார அண்ணாமலை, எளிய தமிழ் மக்களின் இல்லங்களில் எல்லாம் ஒரு அங்கமாகவே ஆகக் காரணமாக இருந்த படம் அது.

அண்ணாமலை படத்தை முதலில் இயக்கவிருந்தவர் கே பாலச்சந்தரின் மாணவர் வசந்த். அப்போதுதான் கேளடி கண்மணி என்ற நல்ல வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார். அவர்தான் அண்ணாமலை படத்தின் இயக்குநர் என விளம்பரங்களும் வெளியான நிலையில், திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார் வசந்த் (படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற இளையராஜா ஒப்புக் கொள்ளாததால் விலகியதாக பின்னர் தெரியவந்தது. அந்தப் படத்துக்கு இளையராஜா பணியாற்றாமல் போனதற்கான காரணம் தனி கதை. அடுத்த படமான வீராவில் இளையராஜா மீண்டும் ரஜினியுடன் இணைந்தார். அதுவே அவர்கள் இருவரும் இணைந்த கடைசி படமும்கூட!)

வசந்த் விலகியதால், அண்ணாமலைக்கு இயக்குநரானார் பாலச்சந்தரின் இன்னொரு மாணவர் சுரேஷ் கிருஷ்ணா. அவருக்கு இது எட்டாவது படம். ரஜினியுடன் முதல் படம். முதல் முறையாக கதை விவாதம் தொடங்கி, இசைப் பணிகள் வரை அனைத்திலும் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு ரஜினிக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவம், பின்னர் படத்தில் முக்கிய அதிரடிக் காட்சியாக இடம்பெற, அதுவே படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாகவும் அமைந்தது. ‘நான் சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்’ என்ற ரஜினியின் முத்திரை வசனத்தை உச்சரிக்காத திரை ரசிகர்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான காட்சி அது.

 

அண்ணாமலை படம் வெளியான ஜூன் 27, 1994ஐ ரஜினி ரசிகர் யாராலும் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாது. படத்துக்கு பெரிய அளவில் விளம்பரமே இல்லை. காரணம் அன்றைய ஜெயலலிதா அரசு முழுமையாக ரஜினிக்கு எதிராகவே நடந்து கொண்டது. சென்னை நகரில் அண்ணாமலைக்கு சுவரொட்டிகள் கூட ஒட்ட முடியாத நிலை. ரஜினியின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வாய்மொழி உத்தரவை சிரமேற்கொண்டு வேலைப் பார்த்தது காவல் துறையும். ஆனால் நடந்தது நேர் எதிரான விளைவு. ரஜினிக்கு தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்த செல்வாக்கை, ரசிகர் பலத்தை ஜெயலலிதா தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது அண்ணாமலை.

அண்ணாமலைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் போடப்பட்டாலும், அண்ணாமலைக்குத்தான் தமிழகம் முழுவதும் அதிக அரங்குகளில் அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் தொடங்கின. அதற்கு முன் எந்தப் படத்துக்கும் அமையாத ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் அண்ணாமலைக்குத்தான் அமைந்தது. படம் வெளியான ஒவ்வொரு திரையரங்கமும் உண்மையிலேயே திருவிழாக் கோலத்தில் காட்சி அளித்தன என்றால் சற்றும் மிகையில்லை. அண்ணாமலை ரஜினி பயன்படுத்தியது போன்ற டேப்ரிக்கார்டர் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் பல திரையரங்குகளின் முகப்புகளை அலங்கரித்தன.

படம் வெளியான 25 நாள் வரை, அத்தனை திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிய படம் அண்ணாமலை. ‘முதல்முறை பார்த்தபோது வசனங்களே காதில் விழாத அளவுக்கு பார்வையாளர்களின் உற்சாக கொண்டாட்டம். அதனால் இன்னொரு முறை பார்த்தேன்’ என பலரும் கமெண்ட் அடித்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு கொண்டாட்ட உணர்வைத் தந்த படம் அண்ணாமலை. 

பல அரங்குகளில் 50வது மற்றும் 100 வது நாளன்றும் கூட, பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தார்கள். வசூல் ரீதியாக ரஜினி ஒரு பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக உச்சத்தை எட்டிய படம் அண்ணாமலைதான். அந்தப் படம் போட்டுக் கொடுத்த ராஜபாட்டையில்தான் அடுத்தடுத்து பாட்ஷா, முத்து, படையப்பா என அதிரடி வெற்றிகள் தொடர்ந்தன.

இன்று அண்ணாமலை வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தப் படம் குறித்த செய்திகள், பதிவுகள், படங்கள் நாள் முழுக்க இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருப்பதே, படம் மக்களின் மனதில் எந்த அளவு நிலைத்து நிற்கிறது என்பதற்கு சான்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *