அது 2011-ம் ஆண்டு. ஜூன் 12.
சமூக ஊடகங்கள் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த Blog, FB, Website காலகட்டம். தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்து, மிக உருக்கமான ஒரு குரல்பதிவை வெளியிட்டுவிட்டு சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற ஆரம்பித்த முதல் வாரம். அப்போதுதான் ரஜினி நலம் பெற என்வழி இணையதள நண்பர்கள் சார்பில் உலக அளவில் ஒரு சர்வமதப் பிரார்த்தனையை முன்னெடுத்தோம். ரஜினிபேன்ஸ் நண்பர்களும் இதற்கு துணை நின்றனர். உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரவர் இடத்திலேயே, அவரவர் வழிபாட்டு முறைக்கேற்ப தலைவருக்காக அந்த ஒரு நாளில் ஒருசில மணித்துளிகளாவது பிரார்த்தனை செய்ய வேண்டும்.. அவ்வளவுதான்.
பிரார்த்தனையின் மையப் புள்ளியாக பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலில் இந்த பிரார்த்தனையை முன்னெடுக்க முடிவு செய்து, ஜூன் 12-ம் தேதி பயணத்தை ஆரம்பித்தோம். பண்ருட்டி பிரதான சாலையிலிருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலைக்கு வண்டி திரும்பியபோது, சிங்கப்பூர் எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்தது. ‘தலைவர் ரஜினி உயிருடன் இல்லை’ என்ற மோசமான செய்தி அது. அதிர்ச்சியில் உறைந்துபோனாலும், அடுத்த நிமிடமே அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்து விசாரித்தோம். அந்த நபர் என்வழி வாசகர். தான் அனுப்பிய செய்தி உண்மையே என்று சாதித்தார். மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை முன்பு ஏகப்பட்ட கூட்டம் என்றெல்லாம் சொல்லி மனதை பெரும் துயரில் ஆழ்த்தினார். ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடாமல் பயணத்தைத் தொடர்ந்தோம். பாபாஜி கோயிலில் சிதம்பரம் நண்பர்கள் காத்திருந்தனர். கிட்டத்தட்ட அரை நாள் பிரார்த்தனை நடந்தது. ஊடகங்களும் வந்து படம் பிடித்துச் சென்றன.
பிரார்த்தனை முடிந்து பிற்பகலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். அதே பண்ருட்டி சாலை. மீண்டும் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பரின் போன்கால். நண்பர் வேறு யாருமல்ல, தலைவரின் உண்மைக் காவலர்களில் ஒருவரான சோளிங்கர் ரவியின் சகோதரர் முருகன். தலைவரைப் பார்க்க அவர் சிங்கப்பூருக்கே சென்றுவிட்டிருந்தார். அவர்தான் போனில் அழைத்து, “தலைவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. நலமாக இருக்கிறார். சற்று முன் அவர் உணவு உண்ட காட்சியை நேரில் பார்த்துவிட்டு உங்களுக்குப் போன் செய்கிறேன்,” என்றார். பாபாஜி நிகழ்த்திய அதிசயம், அற்புதமாகவே அதை உணர்ந்து கண்கள் பணிக்க பரங்கிப்பேட்டை நோக்கி வணங்கினோம்.
இந்த சர்வமதப் பிரார்த்தனைக்கு முன் நாங்கள் தலைவருக்காக செய்த முதல் பூஜை, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில். ‘தலைவருக்காக..’ வாட்ஸ்ஆப் குழுவில் உமாசங்கரின் பதிவைப் பார்த்ததும் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இவை நினைவுக்கு வந்தன. மீண்டும் இதுபோல ஒரு முன்னெடுப்பைச் செய்யலாமா… ஜஸ்ட் தலைவரின் உடல்நிலை, ஆரோக்கியத்துக்காக!
https://cinema.dinamalar.com/tamil-news/4296/cinema/Kollywood/worldwide-prayer-for-Rajini.htm
– வினோ