பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சியான் விக்ரம்.
பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற்றுள்ள கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருமே பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல் ஹாஸன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்த ரஜினிகாந்தைப் பார்த்ததும் அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றது. பின்னர் மேடைக்கு முன் வந்த ரஜினியின் காலில் விழுந்து ஆசிபெற்றார் ஐஸ்வர்யா ராய். அவரை அன்புடன் தழுவி ஆசி கூறிய ரஜினி, பின்னர் வணக்கம் வைத்தார். ஐஸ்வர்யா ராயும் பதிலுக்கு வணக்கம் வைத்து தன் மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தினார்.
ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து அருகிலிருந்த நடிகர் விக்ரமும் ரஜினியின் காலைத் தொட்டு வணங்க, ரஜினி அன்புடன் அவருக்கு தன் ஆசியைத் தெரிவித்தார்.
இந்தக் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் உற்சாகக் குரல் எழுப்பினர்.