தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனித்துவம் மிக்க படமான பாபா மறுவெளியீடாக நேற்று உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம் ரஜினியைப் பொறுத்தவரை அவரது மனதுக்கு மிக நெருக்கமான படம். அவரது அரசியல், ஆன்மீக நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொன்ன படம்.
2002-ல் இந்தப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆனால் அரசியல் சூழ்ச்சி, மீடியாவின் ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் காரணமாக எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் 107 அரங்குகளில் 50 நாட்களும், 25-க்கும் அதிகமான திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனைப் படைத்தது பாபா. இப்படியொரு வெற்றியைப் பெற்றிருந்தாலும் பாபாவை தோல்விப் படம் என்ற நேற்று வரை மீடியாவில் குறிப்பிட்டு வந்தனர்.
தலைவர் ரஜினியைப் பொறுத்தவரை இது ஒரு மனக்குறையாகவே இருந்தது. ‘இந்தப் படத்தில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை, பொழுதுபோக்கு அம்சங்களுக்குப் பஞ்சமில்லை. இனிமையான பாடல்கள், அதிரடியான சண்டைகள், அர்த்தமுள்ள இறுதிக் காட்சி என எல்லாம் இருந்தும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையே’ என்ற ஆதங்கம் ரஜினிக்கு இருந்து வந்தது.
அந்த ஆதங்கத்தைப் போக்கிக் கொள்ள, பாபாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது பிறந்த நாளையொட்டி மறுவெளியீடாகக் கொண்டு வருவதாக ரஜினி கடந்த வாரம் அறிவித்தார். காலத்தின் சூழல் கருதி, படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டும், வண்ணத் திருத்தம், துல்லிய ஒலி அமைப்பு செய்து படத்தை வெளியிடப் போவதாக அவரே தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்துக்கு ஏக வரவேற்பு, விசாரணைகள். ஏராளமான திரையரங்குகள் படத்தைத் திரையிட முன்வந்தன. ரசிகர்களும் பாபா மறுவெளியீட்டை, அதன் முதல் வெளியீட்டுக்கு நிகராக வரவேற்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
டிசம்பர் 12-ம் தேதி மட்டும் ஒரு காட்சி மட்டும் வெளியிட்டால் போதும் என்ற ரஜினி முதலில் நினைத்தார். ஆனால் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, டிசம்பர் 10-ம் தேதியே படத்தை வெளியிடத் திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு படம் 400க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. பெரும்பாலும் அனைத்து அரங்குகளிலுமே அதிகாலைக் காட்சி அமர்க்களப்பட்டது. வாணவேடிக்கை முழங்க, பெரும் ஆர்ப்பரிப்போடு படத்தை வரவேற்றனர் ரசிகர்கள்.
புயல், மழை என இயற்கையின் அச்சுறுத்தல்களையும் மீறி அரங்கு நிறைந்த காட்சிகளாக பாபா வெளியானது. படத்தின் ஒவ்வொரு ஆரம்பக் காட்சியை ரசிகர்கள் கைத்தட்டி, விசிலடித்து, மலர் தூவி, தீப ஆராதனை செய்து ரசித்தனர்.
ஒரு பு்திய படத்துக்குக் கிடைக்கும் துவக்கத்தை விட, பிரமாண்டமான துவக்கம் பாபாவுக்குக் கிடைத்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, அதுவும் தோல்விப் படம் என அறிவிக்கப்பட்ட பாபா, தனது மறுவெளியீட்டில் பிரமாண்ட வெற்றிப் படமாக தன்னை நிரூபித்துள்ளது. ரஜினி என்ற ஒருவரால் மட்டுமே இது முடியும், அவருக்கு மட்டுமே இது சாத்தியம் என திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.