ஒரு மாவீரனின் வீர வரலாறு!

ஒரு மாவீரனின் வீர வரலாறு!

ல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற வாக்கியப்பிரயோகத்தை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான், மாவீரன் திப்பு சுல்தான்.

இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு, ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.

“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்,” என தனது இளைய இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் சிலாகித்தார்கள்.

விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி.

பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தைக் காட்டினார் தந்தை ஹைதர் அலி. போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.

ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இன்றைய இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஹைதர் அலி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

1782ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி வீரமரணமடைந்தார். தன் தந்தை வழியேற்று விடுதலைப் போரைத் தொடர்ந்தார் திப்பு. இவர் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அதிர்ந்தனர். ஆம்! திப்பு ஒரு விடுதலை புலி! அவரது கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப் போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார். தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும்போது நபி (ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.

சீர்திருத்தவாதி

ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.

சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நல்ல மரபை பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என ஆணையிட்ட மனித உரிமைப் போராளி.

கலைஞன் & கல்விச் செம்மல்

உருவமற்ற ஓவியங்களையும், தோட்டங்களையும், நீரூற்றுகளையும் தனது அரண்மையில் உருவாக்கிய திப்பு மிகச் சிறந்த கலை ரசிகர். நல்ல கலைஞர்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜரின் முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது. இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து பார்த்தார். குர்ஆனை தானும் ஓதி, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் ஓத வலியுறுத்தினார்.

தன் பிள்ளையை படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது அறிவிப்பாக இருந்தது.

நூலகமும் அறிவாற்றலும்

ஏழைகள் இரவும், பகலும் உழைத்துத் தந்து அப்படியே மரணிக்கின்றனர். ஓடும் ஆறுகளின் அழகை ரசிக்கவோ, மேகத்திரள்களை கண்டு மகிழவோ, வானங்களை, சோலைகளை ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்களது நிலை அப்படியேதான் உள்ளது என்று இலக்கியப் பார்வையுடன் கூடிய இரக்கமுள்ள ஆட்சியாளனாகவும் திகழ்ந்தார்.

இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்பு சுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.

வெளியுறவுக் கொள்கை

திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச் சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவு துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்தமண்ணில் வேரூன்ற விட மாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார். அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ் பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டி நோபிலுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார். அச்சமயம் துருக்கியர்கள், மிகப் பெரிய ரஷ்யாவை எதிர்த்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களால் திப்புவுக்கு உதவ முடியவில்லை. மனம் தளராத திப்பு அன்றைய ஐரோப்பாவை மிரட்டிய நெப்போலியனுடன் ராணுவ ஒப்பந்தம் போட ஒரு தூதுக் குழுவை அனுப்பினார். ஆங்கிலேயர்களை ஐரோப்பாவில் மிரட்டிய நெப்போலியனும், இந்தியாவில் அதிர வைத்த திப்புவும் ஓரணி திளர வேண்டிய தருணம் வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். ஆனாலும் உறவுகளும், ஒப்பந்தங்களும் வந்தபோதும், அது நிறைவேறாமல் போனது வரலாற்று விபத்தாகும்.

திப்புவுக்கு நெப்போலியன் ஒரு கடிதம் எழுதினார். அது பின்வருமாறு:

தேசிய அமைப்பின் தலைமை தளபதி நெப்போலியன் போனபர்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது…

வெல்ல முடியாத படையுடன், தங்களை பிரிட்டனின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க ஆவலுடன் வரவிருக்கிறோம், மஸ்கட் வழியாக. தாங்கள் அனுப்பிய தகவல்கள்படி தங்களின் விருப்பத்தையும், அரசியல் சூழ்நிலைகளையும் அறிந்தோம். சூயஸ் (கால்வாய்) அல்லது கெய்ரோவுக்கு தங்களது கருத்தை அதிகாரப்பூர்வமான, திறமைமிக்க ஒருவர் மூலம் அனுப்பவும். அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.

புகழ்பெற்ற இக்கடிதம் 1798ல் கெய்ரோவில் இருந்தபடி நெப்போலியன் எழுதியது.

இக்கடிதம் திப்புவின் கைகளுக்கு கிடைக்கும் முன்னரே திப்பு கொல்லப்பட்டுவிட்டார். புகழ்பெற்ற முதல் ஆசிய – ஐரோப்பிய ராணுவ உடன்படிக்கையாக மலர வேண்டிய அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது, இந்திய விடுதலையை இருநூறு ஆண்டுகள் ஒத்தி வைத்தது.

சமூக நல்லிணக்கத் தலைவன்

தமிழக விடுதலை வீரர்களான தீரன் சின்னமலை, மருதிருவர், வேலு நாச்சியார் ஆகியோர் திப்புவிடம் ராணுவ உதவியை பெற்றவர்கள்.

ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம் போன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் இருந்ததால் அவர்களை எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே கருதினார் திப்பு. திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி கேரளாவின் மலபார், ஆந்திராவின் ஒரு பகுதி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது. இதில் 10 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.

பிற இந்து, கிறிஸ்தவ சமுதாயங்களின் நன்மதிப்பைப் பெற்ற திப்பு சுல்தானை மிகச் சிறந்த சமூக நல்லிணக்கவாதி என வரலாற்று அறிஞர்கள் புகழ்கிறார்கள்.

“மதங்களிடையே நல்லுறவு என்பது குர்ஆனின் கூற்று. லகும் தீனுகும் வலியதீன் என்பதாகும்” என தனது 1787ஆம் ஆண்டின் பிரகடனத்தில் திப்பு வெளியிட்டார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன. தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட ‘சிட்டிசன் திப்பு” என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.

இந்துக்களின் நண்பன்

கி.பி 14ஆம் நு£ற்றாண்டில் மராட்டிய இந்துப் படை சிருங்கேரி நகரைத் தாக்கி 17 லட்சம் வராகன் மதிப்புள்ள சொத்துக்களைக் கொள்ளையடித்தது. அதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையும் ஒன்று. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்த சங்கராச்சாரியாருக்கு உதவ திப்பு முன் வந்தார். பெருமளவில் நிதியுதவி செய்து மீண்டும் சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தார்.

திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள் ஓடி ஒளிந்தனர். கிருஷ்ணன்சிலையை வேறு ஊருக்கு மாற்றினர். இதையறிந்த திப்பு, தான் மதவெறியனல்ல என்பதையும், தனது நோக்கம் ஆட்சியை விரிவுபடுத்துவதும், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதும்தான் என்பதையும் தெளிவுபடுத்த அந்த கோயிலுக்கு பாதுகாப்பை வழங்கினார். மீண்டும் அங்கே கிருஷ்ணர் சிலையை கொண்டு வரச்செய்தார். குருவாயூர் வட்டத்தின் வரி வசூல் முழுமையையும் கிருஷ்ணர் கோயிலுக்கு அளித்தார். இந்துக்கள் வியந்து போய், திப்புவின் நேர்மையைக் கொண்டாடினர்.

மைசூரை அடுத்த மேலக்கோட்டையில் ஐயர்களுக்கும் & ஐயங்கார்களுக்கும் இடையில் வடகலையா-? தென்கலையா? என்ற உள் மத மோதல் நிலவியது. இதனால் கோயில் சடங்குகளில் பிரச்சினைகள் உருவானது. இதையறிந்த திப்பு இருபிரிவுக்கும் இடையில் சமாதானம் செய்து, இரு தரப்பும் ஏற்கும் வகையில் கோயில் நிகழச்சிகளை நடத்திட தீர்ப்பளித்தார்.

சிருங்கேரி மடாதிபதிக்கு மரியாதை தரும் திப்பு
சிருங்கேரி மடாதிபதிக்கு மரியாதை தரும் திப்புவின் அரிய படம் (ஓவியம்). வெளியீடு: சிருங்கேரி மடம்

திப்புவின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜய நகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அவரது அரண்மனைக்கு அருகிலேயே இருந்தது. அதில் தடையின்றி வழிபாடுகள் நடக்க உதவி செய்தார். அவர்களின் வழிபாட்டுரிமையை கட்டிக் காத்தார்.

அறிவிக்கப்படாத ஒரு இந்து அறநிலையத் துறையை திப்பு தன் ஆட்சியில் இருந்த பெரும்பான்மை இந்து மக்களுக்காக நடத்தினார் எனலாம். அம்மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காகவும், செலவினங்களுக்காகவும் ஏராளமான நிலங்களையும், நிதிகளையும் வாரி வழங்கினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு உதவிகள் செய்தார். இவரது உதவிகள் அனைத்தும் பல இன மக்கள் வாழும் நாட்டின் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் நீதியாகவே இருந்தது.
ஓரிறைக் கொள்கை கொண்ட திப்பு, பிற மக்களின் பல கடவுள் வழிபாட்டுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்தான் திப்பு!

மது விலக்கு

தமது மக்களின் சமுதாய, பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய் துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல்படுத்தினார்.
மது விற்பனையை தடை செய்ததோடு, அத் தொழிலை செய்து வந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார். இது குறித்து தனது ஆட்சி பணியாளர் மீர் சாதிக் என்பவருக்கு 1787ல் திப்பு ஒரு கடிதம் எழுதினார்.

‘முழுமையான மதுவிலக்கு கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ கூடாது. இது மக்களுக்கு நல்ல தல்ல. இதில் உறுதியான முடிவெடுக்க வேண்டும். நமது இளைஞர்களிடம் நல்லொழுக்கம் உருவாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றைவிட நமது அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமாக கருதுவது எப்படி சரியாகும்? என இடித்துரைத்தார் அக்கடிதத்தில்.

இன்று அரசு வருவாய்க்காக மதுக்கடைகளை நடத்துகிறோம் என நியாயப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் கடிதம் ஒரு சரியான விளக்கமாகும்.

விவசாயம்

விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிகளுக்கு கடன் வழங்கினார். விவசாயத்தில் பண்ணையாளர் போக்குக்கு எதிராக, உழைக்கும் விவசாயிக ளுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

நீர்வளம் காக்க குளங்கள், ஏரிகளை தோண்டினார். சிறிய அணைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார். புதிய ஒட்டு ரக மா மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டது. கரும்பு பயிரிட ஊக்க மளிக்கப்பட்டது. விவசாய உற்பத்தி பொருள்களை அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்தது. அரசே, ஏற்றுமதி, இறக்குமதியை கையாளும் வகையில் வணிகக் கப்பல்களும் வாங்கப்பட்டது. 1790ல் காவிரியின் நடுவே அணை கட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு.

தொழில்கள்

திப்புவின் தொழில் கொள்கை, உள்நாட்டு தொழில்களுக்கே முன்னுரிமை தந்தது. இரும்பை காய்ச்சி வடிக்கும் 5 உருக்காலைகளை திப்பு உருவாக்கினார். துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை பிரான்ஸ் பொறியாளர்களின் துணையுடன் உருவாக்கினார்.

பட்டு உற்பத்தி, காகிதம் தயாரித்தல் இவற்றின் தொழில்நுட்பங்களை அறிந்துவர தொழில் வல்லுனர்களை பிரான்சுக்கு அனுப்பினார். 1788ல் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதிய திப்பு, நமது பொருளாதார, தொழில் கொள்கைகள் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றார்.

முத்து வளர்த்தல், கிரானைட் கற்களை பாலீஷ் செய்தல், தோல் பதனிடல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து உள்நாட்டில் பயிற்சியளிக்க வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

திப்பு இயற்கையின் ரசிகர். உயிரினங்களின் நேசர். பறவைகள், விலங்கினங்களை அழிப்பதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என எச்சரித்தார். உயிரின காப்பகங்களை அமைத்ததோடு, அரிதான விலங்குகளை வேட்டையாடவும் தடை செய்தார்.

காவிரியோரம் அமைந்திருந்த ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் கந்தகக் கழிவுகள் ஆற்று மீனை அழித்துவிடக் கூடும் என்பதால், அந்த தொழிற் சாலையை வேறு இடத்துக்கு மாற்றினார். இப்போது போபால் விஷ வாயு விபத்து நடந்து 26 ஆண்டு காலமாய் அம்மக்கள் படும் துயரத்தை நினைக்கும் போது, திப்புவின் இச்செயல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

தவறு செய்யும் விவசாயிகளுக்கு வித்தியாசமான முறையில், ’’சேவை செய்யும்’’ தண்டனை வழங்கப் பட்டது. அவர்கள் வாழும் ஊரில் இரண்டு மாமரங்கள், இரண்டு பலா மரங்கள் நட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்த்து, மூன்றடி உயரம் வரை அதை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார் திப்பு. இன்றைய புவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து அன்றே கவலைப்பட்டிருக்கிறார் திப்பு.

திப்புவும் மார்க்கமும்

இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலியனுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்.
இன்றைய ஓமன் தலைநகர் மஸ்கட் அன்று பெரும் வணிக நகராக இருந்தது. பல இந்திய வணிகர்களின் போக்குவரத்து நகராகவும் இருந்தது. அங்கு ஒரு பள்ளிவாசலை கட்ட திப்பு நிதியுதவி அளித்துள்ளார். மதரஸாக்களுக்கும், உலமாக்களுக்கும் வாரி வழங்கியிருக்கிறார். குர்ஆனை அனைவரும் ஓத வேண்டும் என முஸ்லிம்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

பார்ஸியை ஆட்சி மொழியாக்கிய திப்பு உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அரசை நிறுவ விரும்பினார். தனது தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப்பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூலகத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நூல்களும் கண்டெடுக்கப்பட்டன.

மனித நேயம்

இன்றைய கேரள மாநிலம் மலபார் திப்பு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் ஜாக்கெட் (மேலாடை) அணிந்து மார்பகங்களை மூடாமல் வாழ்வது அறிந்து பதறினார் திப்பு.

1785ல் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், இது தொன்மையான பழக்கமா? அல்லது வறுமையா? வறுமை என்றால், அவர்கள் மேலாடை அணிய அனைத்து நிதி உதவிகளையும் செய்யுங்கள். இது மத நம்பிக்கை எனில், நம்பிக்கையை புண்படுத்தாத வண்ணம் நட்பு ரீதியாகப் பேசி நடவடிக்கை எடுங்கள். ஆண்களுக்கு இல்லாமல், பெண்களுக்கு மட்டும் இது சுமத்தப்பட்டால் அது நீதிக்குப் புறம்பானது. தமது தாய்மார்களும், சகோதரிகளும் பாதி நிர்வாணமாக நடமாடுவதை எப்படி அந்த இன இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்? என அக்கடிதத்தில் திப்பு அங்கலாய்த்திருக்கிறார்.

இறுதியில் அந்த பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்ற திப்புவின் முயற்சி வென்றது.

திப்புவின் கோட்டை – ஸ்ரீரங்கப்பட்டினம், கர்நாடகம்

திப்புவின் போர்திறமை

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.

முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.
அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.

திப்பு சுல்தானின் கோடை அரண்மனை, ஸ்ரீரங்கப்பட்டினம்

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை. திப்புவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயர்கள் விரண்டோடுவதை விளக்கும் வண்ணமாக லண்டனில் வெளிவந்த கேலிச்சித்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த கேலிசித்திரம் மூலமாக மாவீரனின் போர்த் திரமையை அறிந்துகொள்ளலாம்.

மாவீரனின் போர்வாள்

போரில் கடுமையாக காயமடைந்து தோல்வியின் விளிம்பில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு உகப்பான இந்த வாளைப் ப்றிக்க முயன்ற ஆங்கிலேய சிப்பாயை இந்த வாளாலேயே கொன்றார் மாவீரர் திப்பு.

மிக பிடித்தமான விளையாட்டுப் பொருள்

இதுதான் மாவீரர் திப்பு சுல்தானுக்கு மிக பிடித்தமான விளையாட்டுப் பொருள். ‘சீறும் புலியின் கால்களில் சிக்கி கதறும் ஆங்கிலப் படை வீரன்’ அந்த அளவுக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

ஷஹீதானார் ‘திப்பு’

ஆங்கிலேயர்களை அலற வைத்து, அவர்களை தென்னிந்தியாவிலேயே தடுத்து நிறுத்தி போராடிக் கொண்டிருந்த திப்பு, இறுதியாக மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயருடன் போரிட்டார். துரோகம், எதிரிகளின் பெரும் படை, நவீன ஆயுதங்கள் எல்லாம் எதிரணியின் பக்கம். திப்புவின் படை வீரப் போரிட்டது. எனினும் தோல்வியைச் சந்தித்தது. திப்பு சரணடையவும், சமாதானம் பேசவும் ஆங்கிலேயர்கள் வாய்ப்பு வழங்கினாலும், அவர் அதை நிராகரித்தார். இறுதியாக தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை.

திப்பு சுல்தான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்

தன் வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் 1799, மே4 அன்று திப்பு ஷஹீதானார். இந்திய விடுதலைக்கு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக்குர் ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன.

நன்றி மறந்த தேசம்

இந்தியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் காரணமாக யார், யாரோ குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திப்புவின் தியாகமும், வரலாறும் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.

திப்புவின் வாள் தொடர்…

நடிகர் சஞ்சய்கான் என்பவர் ‘திப்புவின் வாள்’ என்று தூர்தர்ஷனுக்கு தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரித்தார். ஆனால், அது ‘ஒரு கற்பனைக் கதை’ என அடைப்புக் குறிக்குள் போட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் தொலைக்காட்சி அனுமதி அளித்து, தன்னை கேவலப்படுத்திக் கொண்டது. 1980களின் இறுதியில் நடைபெற்ற இச்சம்பவம் வரலாற்று ஆர்வலர்களையும், தேசப்பற்றாளர்களையும் உலுக்கியது. அந்த டி.டி. தொலைக்காட்சியில் அதிக மக்கள் பார்க்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரத்தில் ஒளிபரப்ப அனுமதி வழங்காமல், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பிறகே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. அந்நாட்களில் மக்கள் முன் கூட்டியே உறங்கிவிடும் பழக்கத்தில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே காலகட்டத்தில் நேருவினால் கற்பனை என கூறப்பட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற தொடர்கள் அதே தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமையின் பகல் பொழுதுகளில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் மரியாதை

இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்துப் பயன்படுத்தினார். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக் கூடமான வாலோ பஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்புக் கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் மிகப் பெரிய ஓவியத்தைப் பார்த்தேன். அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப் போர்க் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது!”

ராஜ்கிரண்
நடிகர் – இயக்குநர் – தயாரிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *