அவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க!

அவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க!

னது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவரது கொள்கை குறித்து இனிதான் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக, மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்!”

– மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் லேட்டஸ்டாக உதிர்த்திருக்கும் முத்து இது. இதற்கு முன்பு, நான் ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பேன், எம்ஜிஆரின் நீட்சி நான், 280 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சூரப்பாவைக் காப்பாற்றுவேன் என்றெல்லாம் பேசி வரும் கமல் ஹாஸன், அடுத்து தனது ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார், தனது தேர்தல் பிரச்சாரத்தில்.

கமலுடன் கைகோர்த்துதான் தனது அரசியலை செய்யும் நிலையில் உள்ளாரா ரஜினிகாந்த்?

ஓட்டுப் போடுவதோடு தனக்கும் அரசியலுக்குமான தொடர்பு முடிந்துவிட்டதாக கடந்த 2017 வரை கூறிக் கொண்டிருந்தவர் கமல் ஹாஸன். என்றைக்கு ரஜினி தனது அரசியல் வருகையை ரசிகர்களைக் கூட்டி அறிவித்தாரோ, அன்று தொடங்கியது கமல் ஹாஸனுக்கு அரசியல் காய்ச்சல். ட்விட்டரில் அவ்வப்போது மாலை வேளைகளில் அரசியல் பேசி வந்தவர், திடீரென ஒரு நாள் கட்சியை அறிவித்தார். அதற்கு ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். ஆனால் கமல் ஆரம்பித்த கட்சிக்கும் சரி, அவரது தேர்தல் பிரச்சாரங்களுக்கும் சரி, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்போ எதிர்ப்பார்ப்போ இல்லை என்பதே உண்மை. நாம் தமிழர், பாஜக, நோட்டா வரிசையில்தான் மக்கள் நீதி மய்யமும் இப்போது உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் ஒன்று கூட கமல் ஹாஸனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன் வரவில்லை. முன்னணி கட்சிகளின் கூட்டணிகளில் கமல் ஹாஸனை சேர்க்கவும் யாரும் முன்வரவில்லை. அவ்வளவு ஏன்… ஒரு முறை திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கமல் ஹாஸனை ஒப்புக்குக் கூட அழைக்கவில்லை. அதாவது அவரை ஒரு அரசியல் தலைவராகவோ, அவரது மய்யத்தை ஒரு கட்சியாகவோ கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை, தமிழகத்தின் பிற கட்சிகள். இதுதான் தமிழகத்தில் கமல் ஹாஸன் கட்சிக்கான கள யதார்த்தம்.

இப்போது வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கான பரப்புரையை சில தினங்களுக்கு முன் தென் தமிழகத்திலிருந்து தொடங்கியிருக்கிறார் கமல். ஆனால் இந்த பிரச்சாரத்துக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை என்பதே உண்மை. அதிகபட்சம் 100 பேர் கூ(ட்)டுவதே சிரமம் என்ற நிலை. தன்னை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஒரு பொருட்டாக யாரும் கருதவில்லை என்பது புரிந்தும், ‘நானும் ரவுடிதான்’ என்று தன் இருப்பைக் காட்ட முயன்று வருகிறார் கமல் ஹாஸன். சராசரி அரசியல்வாதிகளின் இயல்பு அதுதானே!

ஆனால் ரஜினியின் அரசியல் வருகை முற்றிலும் வேறு விதம். அவர் அரசியலுக்கு வரமாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு கால்நூற்றாண்டாக இருந்து வருகிறது. ரஜினியின் அரசியல் நிலைப்பாடு சமூக வலைத்தள அறிவுஜீவிகளால் மட்டுமே கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில், அரசியல் கட்சிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. சின தினங்களுக்கு முன் தன் புதிய கட்சி குறித்த அவரது அறிவிப்பே இந்தியா முழுவதும் தலைப்புச் செய்தி ஆனது. இந்தியாவில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ரஜினியின் கட்சி அறிவிப்பு முக்கியச் செய்தியாக இடம்பெற்றது என்றால் ரஜினியின் வீச்சு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்து தமிழகத்தில் திமுக தவிர மற்ற கட்சிகள் தங்கள் கூட்டணிக் கணக்குகளை மாற்றிப்போட ஆரம்பித்துள்ளன. அவர் முறைப்படி கட்சியின் பெயரை அறிவித்த கையோடு, அவருடன் கைகோர்க்க 6 முக்கிய கட்சிகள், ஏராளமான அரசியல் பிரமுகர்கள் காத்திருக்கின்றனர் என்கிறது உளவுத் துறை குறிப்பு.

ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதே கள யதார்த்தம். மக்கள் மத்தியில் ரஜினி அரசியலுக்கு இருக்கும் வரவேற்பு, சாதி மத மாச்சர்யங்கள் தாண்டி அவருக்கு வாக்களிக்க தயாரான மனநிலையில் உள்ள வாக்காளர்கள் எல்லாமே இந்தத் தலைமுறை அரசியல்வாதிகள் இதற்கு முன் பார்த்திராதவை.

அரசியலில் ஓராண்டுக்கு முனம் கட்சி தொடங்கி, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தாலும், கமலின் இருப்பு என்பது இன்னும் மைனஸில்தான் இருக்கிறது. ஆனால் கட்சியே தொடங்காவிட்டாலும் ரஜினியின் மதிப்பும், அவருக்கான எதிர்ப்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. கமலின் தேவை ரஜினிக்கோ அவரை எதிர்ப்பார்க்கும் தமிழக வாக்காளர்களுக்கோ கொஞ்சமும் இல்லை. ஆனால் கமல் ஹாஸனுக்கு ரஜினியின் தேவை ரொம்பவே வேண்டியிருக்கிறது. அரசியலில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவாவது அவருக்கு ரஜினியின் பெயரும் நட்பும் தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் கைகோர்ப்பேன் என கமல் ஹாஸன் கூறுவதெல்லாம் பெரும் நகைப்புக்குரியதே.

நட்பு வேறு அரசியல் வேறு என்பதை ரஜினி நன்கறிவார் என நம்பலாம். ஒருவேளை 44 ஆண்டுகால நட்பு என்ற பெயரில் கமல் ஹாஸனுடன் கைகோர்க்க ரஜினி தயாரானால், அவரது கணிசமான ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்பதே சந்தேகமாகிவிடும். இதையும் ரஜினிக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

ஆக, கமல் ஹாஸன் தன் ஈகோவை அத்தனை சீக்கிரம் விட்டுத் தரத் தேவையில்லை. தேர்தல் முடியும்வரை தன்னுடனே வைத்துக் கொண்டால் ரஜினிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது!

விதுரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *