இசைராஜாவின் புதிய கோட்டை!

இசைராஜாவின் புதிய கோட்டை!

ன்றைய இசையமைப்பாளர்கள் முதல் படம் முடித்த கையோடு, ஏன்… முதல் படம் இசையமைக்கும்போதே, சின்னதாகவேனும் சொந்த ஸ்டுடியோ வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்த பிறகு, தனது 76வது வயதில்தான் இளையராஜாவுக்கு அதற்கான தேவை வந்திருக்கிறது.

எண்பதுகளில், தொண்ணூறுகளில் இளையராஜா ஜஸ்ட் நினைத்திருந்தாலே போதும், பிரசாத் வளாகத்தையே விலைக்கு வாங்கியிருக்க முடியும். அல்லது அதைவிட பிரமாதமான ஒரு ஸ்டுடியோவை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும்.

90களில் இளையராஜா படுபிஸியாக இருந்த நேரத்தில், இதே பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேறினார். அப்போது ஏவிஎம்மை தனது இசைக் கூடமாகப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் ஒரு சொந்த ஸ்டுடியோ உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது கைகூடவில்லை. மீண்டும் பிரசாத்துக்கே திரும்பினார். அதன்பிறகு தொடர்ந்து 35 ஆண்டுகள் அதே பிரசாத் ஸ்டுடியோதான். இந்த 35 ஆண்டுகளில் அவர் சொந்த ஸ்டுடியோ முயற்சியை மீண்டும் தொடரவே இல்லை. எப்போதும் இசைமயமாய் இருந்துவிட்டார். இப்போதும்கூட பிரசாத் ஸ்டுடியோக்காரர்கள் பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தால், இசைஞானி தனது கடைசி நாள் வரை சொந்த ஸ்டுடியோ பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாரோ என்னமோ!

இசையுலகுக்கு இப்போது ஒரு புதிய முகவரி… சென்னைக்கு இன்னுமொரு புதிய அடையாளம் (Landmark)!

இந்த புதிய ஸ்டுடியோ திறப்பின்போது ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ராஜா அளித்த பதில்…

“ஐயா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தீர்கள். இப்பொழுது அதை விட்டு வெளியேறியது வருத்தமாக இருக்கிறதா?”

இளையராஜா: வருத்தமா? ஏன்யா… நடந்த வாழ்க்கைக்கு வருத்தப்படுவியா நீ? வாழ்க்கையில் எவ்வளவோ கடந்து வந்திருப்ப… அதற்கு இப்ப வருத்தப்பட்டுக்கிட்டு வேலை செய்வியா? அப்படி வேலை செய்ய முடியாது. அதது வருது போகுது அப்படித்தான்.

நடந்து போய்க்கொண்டு இருக்கிறாய், நடுவில் மழை வருது, இன்னும் போகிறாய் காக்கை எச்சம் படுகிறது. என்ன செய்வ.? எல்லாத்தையும் கடந்து செல்ல வேண்டும். எல்லாம் சவால்தான். மனுஷனுக்கு இடைஞ்சல் தருவது மாதிரி வெளில யாருக்கும் இருக்காது. அதுவும் முன்னேறுகின்றவனுக்கு எவ்வளவோ இடைஞ்சல்கள் வரும். இடைஞ்சல் வந்தால் என்ன.? நம்ம வேலையை முழுமூச்சோட செய்யும்போது நாம் அடைகின்ற இடமே வேறாக இருக்கும்!”

இளையராஜாவுக்கு இப்போது வயது 76. இந்த வயதிலும் ‘பழைய’ராஜாவின் சுறுசுறுப்பையும் வேகத்தையும் கோபத்தையும் தன்னம்பிக்கையையும் அவரிடம் பார்க்கலாம். மேலே நீங்கள் படித்தது அதன் வெளிப்பாடுதான்!

இன்றும் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 18 படங்களைக் கையில் வைத்துள்ளார் இளையராஜா. அவரது சாதனைப் பயணம் இன்னிசையுடன் தொடரட்டும்!

– வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *