சென்னை: தனது திரையுலகப் பயணத்தின் 47 ஆண்டுகள் நிறைவடைந்தது மிக எளிமையாக குடும்பத்தினருடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
1975-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின் தனது தனித்த நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் கடந்த 47 ஆண்டுகளில் 45 ஆண்டுகளாக முதல் நிலை நடிகராக, சூப்பர் ஸ்டாராகவே தொடர்கிறார்.
இந்த பெருமைக்குரிய தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த #47YearsofRajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாடப்படும் அதேவேளையில் அவருடைய தந்தையின் திரைவாழ்க்கையை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சுதந்திரத்தின் 76 ஆண்டுகள் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை,பெருமை மகள் என்று குறிப்பிட்டு, அதோடு ரஜினிக்கு தேசியக்கொடியை குத்தி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றது.
தனது அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா லதா ரஜினிகாந்த் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், “எங்கள் அன்பான ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகை, எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படமும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனது திரைப்பயணத்தின் 47வது ஆண்டை வீட்டில் ரஜினிகாந்த் மிக எளிமையாகக் கொண்டாடினாலும், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பிரமாண்டமாகக் கொண்டாடித் தீர்த்தனர். பல அழகான டிசைன்களை உருவாக்கி அவற்றை தங்கள் சமூக வலைத் தளப் பக்கங்களில் பொதுப் படமாக வெளியிட்டு மகிழ்ந்தனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.