என் நண்பன் ரஜினிகாந்த் மிக மிக நல்லவன்… அதனால் அவர் அரசியலுக்கு வராததே அவருக்கு அனைத்து விதத்திலும் நல்லது என்று நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார்.
ரஜினி அரசியல் என்பது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் விஷயம். சில விமர்சகர்கள் இதுகுறித்து எதிர்மறையாகப் பேசினாலும், ரஜினி ரசிகர்களும், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்பினர். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 22 ஆண்டுகள் அமைதி காத்த ரஜினிகாந்த், கடந்த 2017 -ல் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி… தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அப்போது முதல் தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும் ஆட்டம் கண்டுவிட்டன. வரும் டிசம்பர் 31-ம் தேதி புதிய கட்சியை அறிவிப்பேன், என்று உறுதியாகக் கூறிவிட்டு, அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினி, அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவர் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும், மன அழுத்தம் தரும் எந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுடன் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அடுத்த நாளே, புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக ரஜினி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது ரசிகர்கள், பொதுமக்கள், விமர்சகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ஒட்டு மொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த இரு தினங்களாக பத்திரிகை, இணையவெளி எங்கும் ரஜினியின் அரசியல் முடிவு குறித்த பேச்சுகள்தான்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் விலகல் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் முன்னாள் எம்பியுமான மோகன்பாபு தெரிவித்துள்ள கருத்து மனதைத் தொடும் விதத்தில் உள்ளது.
அதில், “ரஜினிகாந்த் என் உயிர் நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவரது உடல்நிலை காரணமாக அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்தார். ஒரு வகையில் அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்பது உங்களுக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு நண்பனாகவும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்தவனாகவும், அவர் அரசியலில் இறங்காமல் இருப்பது நல்லது என்று நான் நம்புகிறேன்.
நான் அவரிடம் அரசியல் குறித்துப் பல முறை பேசியுள்ளேன். நீ மிகவும் நல்லவன், எறும்புக்குக் கூட தொந்தரவு நினைக்காதவன், என் பார்வையில் மிக உயர்ந்த மனிதன் நீ. உன்னைப் போன்ற, என்னைப் போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒத்து வராது. ஏனென்றால், நாம் உண்மையை அப்பட்டமாகப் பேசுபவர்கள், யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம், பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது, வாங்கவும் மாட்டோம். இங்கு யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்பது தெரியாது.
அரசியலில் இறங்கும் வரை நல்லவன் என்று சொல்பவர்கள் நாளை அரசியலுக்கு வந்தபின் கெட்டவன் என்பார்கள். அரசியல் ஒரு அபத்தம், சேறு. அந்தச் சேறு உங்கள் மேல் ஒட்டாமல் இருப்பதே நல்லது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தைப் போலவே நல்லவர்கள். நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
Collection King Dr @themohanbabu about his dearest friend superstar @rajinikanth health and his recent decision about political entry.#Mohanbabu #Rajinikanth pic.twitter.com/8L2mDfKgoW
— BA Raju's Team (@baraju_SuperHit) December 31, 2020
மோகன் பாபுவின் இந்த அறிக்கை, ரஜினி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல!
– என்வழி