வெளியானது 15 ஆகஸ்ட், 1975
சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் 25 வயது இளைஞனை சென்னை திரைப்படக் கல்லூரியில் சந்தித்த கே பாலச்சந்தர், அந்த இளைஞரின் கண்கள், வித்தியாசமான முடி, வசீகரமான முகத்தால் கவரப்பட்டு, தன்னை அலுவலகத்தில் சந்திக்கும்படி கூறிவிட்டுச் செல்கிறார். நேரில் வந்து பார்த்த சிவாஜிராவிடம் அவர் கூறியது, “தமிழை மட்டும் திருத்தமாகக் கற்றுக் கொள். உன்னை எங்கு கொண்டுபோய் வைக்கிறேன் பார்!”
அன்றே பாலச்சந்தரை குருவாக ஏற்றுக் கொண்ட சிவாஜிராவ், வெகு சீக்கிரமே தினத்தந்தி படிக்கும் அளவுக்கு தமிழ் கற்றுக் கொண்டார்… வசனங்களை திருத்தமாக உச்சரிக்கும் அளவுக்கு தமிழில் பேசவும் முயன்றார். முதல் பட வாய்ப்பு அபூர்வ ராகங்கள். தலைப்பைப் போலவே மிக அபூர்வமான கதையமைப்பு கொண்ட படம்.
அன்றைக்கு வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகரான கமல் ஹாஸன்தான் நாயகன். ஸ்ரீவித்யா நாயகி. மேஜர் சுந்தர்ராஜன், ஜெயசுதா, நாகேஷ் என தேர்ந்தெடுத்த முத்துக்கள் மாதிரி நட்சத்திரங்கள். இவர்களுடன் சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினிகாந்த் எனும் புதிய பெயரோடு அறிமுகமானார்.
‘உன் மகள் உனக்கு மாமியார், என் மகன் எனக்கு மாமனார்… எப்படி கதை புதுசா இருக்கில்ல?’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் கதையே. ஒரு அப்பாவும் மகனும்; அம்மாவும் மகளும் முறையை மாற்றி ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதுதான் இந்த படத்தின் மையக்கரு. இதைக் கேட்டவுடனே முகம் சுளித்த பலரும் படத்தைப் பார்த்து கைத்தட்டிப் பாராட்டியதுதான் இந்தப் படத்தின், அதன் இயக்குநரின் தனித்தன்மை.
படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருவார் கவியரசர் கண்ணதாசன். படத்தில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அமைத்த இசை, அதற்கு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் கதையின் நாயக நாயகிக்கு இணையான முக்கியத்துவம் பெற்றன என்றால் மிகையல்ல.
அதிசய ராகம்…
கைகொட்டி சிரிப்பார்கள்…
ஏழு ஸ்வரங்களுக்குள்…
கேள்வியின் நாயகனே… நான்கு பாடல்கள். நான்குமே சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்தவை. குறிப்பாக கைகொட்டி சிரிப்பார்களும், கேள்வியின் நாயகனேவும். படத்தின் உச்சக்காட்சியை கேள்வியின் நாயகனே பாடலை வைத்தே முடித்திருப்பார் கே பாலச்சந்தர்.
1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தப் படம் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் மிட்லண்ட், அகஸ்தியா, ராக்சி மற்றும் கிருஷ்ணவேணி திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த நான்குமே பெரிய திரையரங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தோன்றியது நான்கு காட்சிகள்தான் என்றாலும், அவரது வசீகரமான தோற்றம் ரசிகர்கள் மனதில் எடுத்த எடுப்பிலேயே அழுத்தமாகப் பதிந்து போனது. கதைப்படி அவரது பாத்திரத்தின் பெயர் பாண்டியன்.
படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சியில் இரும்புக் கம்பிகளாலான வாசல் கதவுகளை அலட்சியமாகத் திறந்தபடி ‘பைரவி வீடு இதுதானே?’ என்று கேட்டுக் கொண்டே நுழைவார். அங்கே ‘சுருதி பேதம்’ என தலைப்பு வரும்படி காட்சி அமைத்திருப்பார் கே பாலச்சந்தர். ஆனால் தமிழ் சினிமாவுக்கு உலகளவில் வாசல் திறந்த வைத்து, இந்திய சினிமாவுக்கே தனி அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுத் தரப் போகிறவர் இந்த ‘சுருதிபேதம்’தான் என்பதை தெளிவாகக் கணித்த பாலச்சந்தர், தனது அடுத்தடுத்த மூன்று படங்களில் நாயகனாக ரஜினியை ஒப்பந்தம் செய்தார், அபூர்வ ராகங்கள் வெளியான கையோடு!
அபூர்வ ராகங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்ல, வணிக அளவிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகத்திலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
படம் வென்ற விருதுகள்:
வெண் தாமரை விருது – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது .
வெண் தாமரை விருது – சிறந்த ஒளிப்பதிவு – பிஎஸ் லோக்நாத்
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது – வாணி ஜெயராம்
இவை தவிர, சிறந்த நடிகர் (கமல் ஹாஸன்), சிறந்த இயக்குநர் (கே பாலச்சந்தர்), சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் பிலிம்பேர் விருதுகளையும் வென்றது அபூர்வ ராகங்கள்.
– தொடரும்…