சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக் கொள்ளும் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி ஆகிய இடங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது செஸ் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர், தானும் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.
ரஜினிகாந்த்
இந்நிலையில் தற்போது செஸ் போட்டியில் கலந்துக் கொள்ளும் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ்… அனைத்து செஸ் வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” எனக் குறிப்பிட்டு, தான் செஸ் விளையாடிய பழைய படத்தையும் பதிவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது.