பாபாவுக்குக் கிடைத்த வரவேற்பு… மகிழ்ச்சியில் தலைவர் ரஜினி!

பாபாவுக்குக் கிடைத்த வரவேற்பு… மகிழ்ச்சியில் தலைவர் ரஜினி!

டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் மறுவெளியீடாக வெளியான பாபா திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பால் தலைவர் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, கலவையான விமரிசனங்களைப் பெற்ற ரஜினியின் பாபா திரைப்படம், மறுவெளியீடாக நேற்று உலகெங்கும் 400க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது. ரஜினியின் பிறந்த நாள் சிறப்பாக இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ரஜினியே முன்னின்று படத்தில் சில மாறுதல்கள், வெட்டுதல்களைச் செய்து, புதிய முன்னுரையுடன் படத்தை வெளியிட்டார். பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த வெளியீட்டில் முக்கியப் பங்கு வகித்தார்.

படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டாலும், அதற்கு ஒரு நாள் முன்பே சென்னை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்கு லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சரண் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ரஜினியின் பிறந்த நாள் கேக்கை லதா ரஜினி வெட்டி ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் பாபா காட்சி தொடங்கியது. இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாது ரசிகர்கள் சத்யம் அரங்கில் குவிந்திருந்தனர். பாபாவின் முதல் காட்சி தொடங்கி உச்ச கட்டக் காட்சி வரை குறையாத உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். அடுத்த நாளும் மழை தொடர்ந்தது. ஆனால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் மழையைப் பொருட்படுத்தாது ரசிகர்கள் குவிந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாபா வெளியானபோது காட்டியதைப் போலவே ஆர்ப்பாட்டமும் உற்சாகமுமாக பாபாவின் மறுவளியீட்டைக் கொண்டாடினர்.

பாபா முதல் நாள் முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு, அதைத் தொடர்ந்து போடப்பட்ட அத்தனை காட்சிகளுக்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் இந்த அளவு மாபெரும் வரவேற்பும் கொண்டாட்டமும் அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை. திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல கூட்டம், வசூல். ரஜினி சார் இப்போதுதான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்,” என்றார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், “இந்தப் படம் ரஜினி சாருக்கு மட்டுமல்ல, எனக்கும் என்னைப் போலவே ரசிகர்கள் பலருக்கும் கூட மனசுக்கு நெருக்கமான படம். இந்தப் படம் அப்போது ஏன் சரியாகப் போகவில்லை என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருந்தது. ‘நல்ல படம்தானே கொடுத்தோம்… ஏன் சரியா போகல?’ என்று ரஜினி சார் அடிக்கடி கேட்பார். இப்போது மறுவெளியீட்டில் படத்துக்குக் கிடைத்த வரவேற்பும் ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டமும் ‘இதத்தான் எதிர்ப்பார்த்தோம்’ என்ற நிறைவைக் கொடுத்துவிட்டது. முதல் நாள் காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பில் ரஜினி சார் உள்ளம் மகிழ்ந்துவிட்டார்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *