22 நிமிடங்கள்… மொத்த அரங்கையும் அதிர வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

22 நிமிடங்கள்… மொத்த அரங்கையும் அதிர வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டப் படம் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுதான், விழா முடிந்து இருதினங்கள் கழித்தும் இணையத்தில் தீப்பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. மிகப் பிரமாண்டமாக, அதே நேரம் மிக நீண்ட நேரம் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸன் கலந்து கொண்டு இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தினர்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து பல தாமதங்கள், சொதப்பல்கள் நடந்தாலும், ரஜினிகாந்தின் பேச்சு அவற்றை மறக்கடிக்கச் செய்து விட்டது. அந்த விழாவின் ஆகச்சிறந்த நிகழ்வாக அமைந்துவிட்டது ரஜினியின் உற்சாகமும் நகைச்சுவையும் ததும்பிய அந்தப் பேச்சு. ரஜினி பேசி முடிக்கும்வரை கமல் ஹாஸனும் மேடையில் அவருக்குப் பக்கத்திலேயே நின்றார். ‘கால் வலிக்கும்… நீங்கள் இருக்கைக்குப் போய் அமருங்கள் கமல்’ என ரஜினி கேட்டுக் கொண்ட பிறகும், தான் உடன் நிற்பதாகக் கூறி மேடையில் ரஜினியுடனே நின்று கொண்டு, அவரது பேச்சை கைத்தட்டி ரசித்தபடி இருந்தார் கமல் ஹாஸன்.

ரஜினியின் அந்த 22 நிமிடப் பேச்சு முழுமையாக:

லைகா சுபாஸ்கரன், இந்த படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சுமார் 70 வருஷத்துக்கு முன்னால, கல்கி பத்திரிகையில ‘பொன்னியில் செல்வன்’ தொடரா வரும் போது, பெரிய ஸ்டார் ஹீரோவுக்கு முதல்நாள், முதல் ஷோ டிக்கெட் வாங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ, அதே போல அந்தப் பிரதிய வாங்க வாசகர்கள் துடிச்சாங்க. அந்தமாதிரி புரட்சி செஞ்ச கதைதான் இது.

நானும் புத்தகங்கள் நிறைய படிப்பேன். எல்லாரும் ‘பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?’ன்னு கேட்பாங்க. என் பழக்கம் என்னன்னா, புத்தகம் எத்தனை பக்கம்னு கேட்பேன். 200, 300 பக்கம்னா ஓகே. அதுக்கு மேலனா தொடவே மாட்டேன். அதனால ‘பொன்னியின் செல்வன்’ எத்தனை பக்கம்னு கேட்டேன். அது 5 பார்ட்டுங்க, 2000 பக்கம் வரும்னு சொன்னாங்க. ‘அட போய்யா’ன்னு விட்டுட்டேன்.

பிறகு 80-கள்ல ஒரு பத்திரிகையில, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்ப எடுத்தா, வந்தியத்தேவன் கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்க?’ன்னு வாசகர் கேள்விக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொன்னாங்க. அதுல ‘ரஜினிகாந்த்’னு ஒரே வார்த்தையில சொல்லியிருந்தாங்க. உடனேயே குஷியாயிடுச்சு. கொண்டாங்கடா அந்த நாவலைன்னு வரவைச்சு படிக்க ஆரம்பிச்சேன். அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கி இருப்பேன்.

இந்த கதையில, நந்தினி தான் எல்லாமே. ‘பொன்னியின் செல்வி’ன்னு இதுக்குப்பெயர் வச்சிருக்கணும் (நந்தினியின் பாத்திரப் படைப்பை விவரிக்கிறார்). இதை வைத்துதான், ‘படையப்பா’ நீலாம்பரி கதாபாத்திரம் உருவாச்சு.

(அருண்மொழி வர்மனின் அறிமுகக் காட்சியை ஒரே மூச்சில் தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறார்). இந்தப்

இந்த படத்தை மணி பிளான் பண்ணும் போது, நான் இந்த பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். அவர் ஒப்பு கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சீங்ன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரு யூஸ் பண்ண நான் விரும்பவில்லை. வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அதுதான் மணிரத்னம். ஹாட்ஸ் ஆஃப்!

கதையைப் படிக்கும்போது நான் வந்தியத்தேவனா என்னை நினைச்சிக்கிட்டேன்… பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும்போது எனக்குத் தோன்றியது.

இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும். வாழ்த்துகள். நன்றி வணக்கம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *