இன்று மக்கள் தலைவராக அவதாரமெடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள். இந்த நாளை தமிழகமெங்கும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர், ரஜினியின் காவலர்கள்.
இத்தனை ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்த ரஜினியின் பிறந்த நாளுக்கும், இந்த ஆண்டு கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கும் நிறையவே மாறுதல்களைப் பார்க்கலாம். இத்தனை ஆண்டுகளும் தலைவர் அரசியலுக்கு வரமாட்டாரா என்ற ஏக்கத்துடனே (குறிப்பாக 1996-க்குப் பிறகு) கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். ஆனால் இந்த ஆண்டு தன் அரசியல் பிரவேசம், புதிய கட்சி அறிவிப்பு அனைத்தையும் உறுதிப்படுத்திவிட்டார் ரஜினிகாந்த். வரும் டிசம்பர் 31-ம் தேதி அவரது புதிய கட்சி உதயமாகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றப் போவதாக அறிவித்துக் களமிறங்கியுள்ளார் ரஜினிகாந்த். ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களாக மாறி இந்த முறை தங்கள் தலைவரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், ஏழைகளுக்கு உதவிகள் என பல வழிகளிலும் ரஜினியின் 70வது பிறந்த நாளை நேற்றிலிருந்தே கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத் தளங்களிலும் ரஜினி பிறந்த நாளே இன்று ஹைலைட்டாகி விட்டது.
தமிழகம் மட்டுமல்ல,. பிற மாநிலங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்., அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரஜினி பிறந்த நாளை அவரது ரசிகர்கள் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
– என்வழி