சென்னை: ஆளுநர் ஆர் என் ரவியுடன் அரசியலும் பேசினேன். ஆனால் அதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது: “கவர்னருடனா சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என கவர்னர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் கவர்னர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். கவர்னருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அரசியல் குறித்தும் பேசினேன். ஆனால் அதை உங்களிடம் தற்போது சொல்ல முடியாது,” என்ற ரஜினியிடம், மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டமுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, “மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை” என்று நடிகர் ரஜினி பதிலளித்தார்.
மேலும், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்து கேட்டதற்கு, `நோ கமெண்ட்ஸ்’ என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார். ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று கூறினார்