ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 50 நிமிடம் வரும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.