2. கதா சங்கமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்தது, அறிமுகமானது எந்தப் படம் என்றால் எல்லா ரசிகர்களுமே அபூர்வ ராகங்கள் என சட்டென்று சொல்லி விடுவார்கள். அவர்களிடமே இரண்டாவது படம் எது என்று கேட்டால், தவறாகச் சொல்வார்கள் அல்லது விழிப்பார்கள். காரணம், பெரும் வெற்றியாளர்கள் முதலில் செய்வது மட்டுமே மனதில் பதிவாகும். அவர்களின் இரண்டாவது செயல் பல பேருக்குத் தெரியாது.
அப்படித்தான் ரஜினியின் இரண்டாவது படம் குறித்த தகவல்களும்…
தமிழ் திரையுலகில் சாதாரண நடிகராக அபூர்வ ராகங்களில் அறிமுகமானார் ரஜினி. அவர் இரண்டாவதாக நடித்த படம் கதா சங்கமா. கன்னடப் படம். ஹங்கு, அதிதி மற்றும் முனிதாயி என மூன்று கதைகளின் தொகுப்பாக வந்த இந்தப் படத்தை இயக்கியவர் புட்டண்ணா கனகல்.
இதில் மூன்றாவது கதையான முனிதாயியில் கொண்டாஜி என்ற வேடத்தில் நடித்திருந்தார் ரஜினி. பார்வையிழந்த பெண்ணை கற்பழித்துக் கெடுக்கும் கொடூர வில்லன் வேடம். 16 வயதினிலே படத்தில் ரஜினியின் ‘பரட்டை’ பாத்திரப் படைப்பில் இந்த சாயல் தெரியும் (புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் 16 வயதினிலே இயக்குநர் பாரதிராஜா!)
என்ன.. ஏதோ நினைவுக்கு வருகிறதா… ஆம். சில ஆண்டுகள் கழித்து மகேந்திரன் இயக்கத்தில் தமிழில் வெளியான கை கொடுக்கும் கை, இந்த முனிதாயி கதையின் விரிவாக்கம். கை கொடுக்கும் கையில் அந்த கொடூர வில்லன் வேடத்தில் நடித்தவர் கன்னட நடிகர் ரங்கநாத்.
ஒரே கதை. அதில் ஒரு மொழியில் வில்லனாகவும், இன்னொரு மொழியில் நாயகனாகவும் நடித்த பெருமை ரஜினிக்கு மட்டுமே!
கதா சங்கமா நடிகர்கள்:
ரஜினிகாந்த்
ஆராத்தி
பி சரோஜா தேவி
கல்யாண் குமார்
கங்காதர்
குட்டி பத்மினி
தயாரிப்பு: சிஎஸ் ராஜா
இசை: விஜய பாஸ்கர்
திரைக்கதை – இயக்கம்: புட்டண்ணா கனகல்
வெளியான தேதி: 23 ஜனவரி 1976.
இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றிப் பெற்றது.
படத்துக்கு கர்நாடக அரசின் சிறந்த படத்துக்கான நான்காவது பரிசு கிடைத்தது. படத்தில் முனிதாயி கதையில் பார்வையிழந்த பெண்ணாக நடித்த ஆராத்திக்கு சிறந்த நடிகைக்கான பரிசும், மாஸ்டர் உமேஷுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.
-தொடரும்…