ஹைதராபாத்: ரஜினிக்கு ரத்த அழுத்தம் இப்போது முன்பைவிட சீராக உள்ளது. ஆனாலும் இயல்பை விட சற்று அதிகமாகவே அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது என ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுபத்தப்பட்டது., இதில் பங்கேற்ற ரஜினிகாந்துக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் மாறுபட்ட ரத்த அழுத்தம், உடல் சோர்வு காரணமாக அவருக்கு சிகிச்சையும் ஓய்வும் தேவைப்படுவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. நேற்று இரவு வெளியான இரண்டாவது அறிக்கையில், ரஜினியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராக மருந்துகள் தரப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மூன்றாவது அறிக்கை வெளியிட்டுள்ளது அப்பல்லோ. அதில், “ரஜினிகாந்தின் உடல்நிலையில் நேற்றை விட முன்னேற்றம் தெரிகிறது. நேற்று இரவு முழுவதும் அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய மாறுபாடு இல்லை என்றாலும், இயல்பைவிட சற்று அதிகமாகவே உள்ளது.
ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை
ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அவருக்கு முழுமையான ஓய்வு தேவை.
எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளது.
– என்வழி