சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே ஸ்டூடியோவில்தான் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
ரஜினியின் ஜெயிலரக் படப்பிடிப்பு அருகிலேயே நடப்பதைக் கேள்விப்பட்ட ஷாரூக்கான், ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்ததாகவும், இருவரும் தனிமையில் சினிமா உட்பட பல்வேறு விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி மீது ஆரம்பத்திலிருந்து பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டவர் ஷாரூக்கான். தனது படங்களில் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை அவர் பல முறை பயன்படுத்தியுள்ளார். ஷாரூக்கின் அன்பு வேண்டுகோளுக்காக ரா ஒன் படத்தில் எந்திரன் சிட்டியாகவே தோன்றினார் ரஜினி. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ரஜினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக லுங்கி டான்ஸ் என்ற பாடலை வைத்தார் ஷாரூக் என்பது நினைவிருக்கலாம்.