பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து மணிரத்னம் படம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழ்கிறது தளபதி. இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு 32 ஆண்டுகளாக இருவரும் இணையவே இல்லை.
அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில், பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடிக்க தான் முன்வந்ததாகவும், ஆனால் ரசிகர்களை மனதில் வைத்து, மணிரத்னம் மறுத்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் பாகம் 2 வேலைகளில் ஈடுபட உள்ளார். ரஜினி ஜெயிலர் படத்தில் மும்முரமாக உள்ளார். இந்த இரு படங்களும் முடிந்த பிறகு 2023-ல் ரஜினி – மணிரத்னம் பட அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கிறார்கள்.
ரஜினி கேட்டுக் கொண்டதால் மணிரத்னம் ஒருவரிக் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும், அது ரஜினிக்குப் பிடித்துவிட்டதால், மேற்கொண்டு வேலைகளைப் பார்க்குமாறு கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றி, இந்த இருவரையும் மீண்டும் இணைத்திருப்பதில் வியப்பில்லை என்கிறார்கள் திரையுலகினர்.