’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
உலகெங்கும் 4000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியான ஜெயிலர் படம், இதுவரை ரூ 720 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. 100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு வசூலைக் குவித்த படம் ஜெயிலர்தான் என திரையுலகினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படம் 50-வது நாளைக் கடந்துள்ளது. ஜெயிலர் 50வது நாளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். திரையரங்குகளில் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் 50 நாள் விழா மாவட்ட தலைமை மன்றம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தியேட்டர் உரிமையாளர் ராமையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மேலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
https://x.com/sunpictures/status/1707278047798579248?s=20