கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு… முழுமையாக!

கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு… முழுமையாக!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று தனக்கும் கலைஞருக்குமான உறவு, அனுபவங்ரகள் பற்றி நீண்ட நேரம் பேசினார். அவர் பேச்சு முழுமையாக:

“மு.க.ஸ்டாலினை எனக்கு 1974-ல் இருந்தே தெரியும். அப்பவே பொதுக்கூட்டங்களில் எல்லாம் அவர் இருக்கறதைப் பார்த்திருக்கேன். 9 மணிக்கு மேல கலைஞரோட பையன்னு சொல்லி ஸ்டாலினைப் பேச கூப்பிடுவாங்க. அப்ப இருந்த அதே பேச்சு அவர் கிட்ட இப்பவும் இருக்கு. கடினமா உழைச்சு இப்ப இங்க இவ்ளோ உயர்ந்து முதல்வரா ஆகியிருக்காரு.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்துல 23 படத்துல நடிச்சிருக்கேன். முத்துராமன் எப்பவும் கலைஞர் பத்திதான் பேசிக்கிட்டே இருப்பாரு. 1955-ல சினிமாக்கு வசனம் எழுதி வாங்குன கோபாலபுரம் வீட்லதான் கடைசி வரைக்கும் கலைஞர் இருந்தாரு. அந்த வீட்ல எதையுமே மாற்றல. ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டு போனாரு. எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது. ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு.

எழுத்து ஒரு இயற்கை சக்தி. எழுத்து இல்லன்னா அரசு இல்ல, அரசாங்கம் இல்ல. அப்படியான எழுத்து சக்தி கலைஞர்க்கிட்ட இருந்துச்சு. கலைஞர் எழுதுன கடிதங்களைக் கொஞ்சம் படிச்சிருக்கேன். சில கடிதங்களைப் படிக்கும் போது கண்ணுல கண்ணீர் வரும். சில கடிதங்களைப் படிக்கும்போது கண்ணுல நெருப்பு வரும்.

பாமரர்கள் இருக்குற சபைல பாமரனுக்கும் பாமரனா பேசுவாரு. அறிஞர்கள் இருக்குற சபைல அறிஞருக்கும் அறிஞரா பேசுவாரு. முன்னாடி ஒரு தடவை என்னோட இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கிட்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விட்ற நேரத்துக்கு கையில் சிகரெட் வச்சுக்கிட்டு போய் நின்னேன். அப்ப பின்னாடி சில காருங்க வந்துச்சு. யாருன்னு பார்த்தா கலைஞர் கார். சிகரெட்ட தூக்கிப் போட்டு ஓரமா போனேன். அப்ப அந்த கார் என் முன்ன வந்து கொஞ்சம் மெதுவாச்சு. கண்ணாடி இறங்குச்சு. ரஜினின்னு ஒரு சிரிப்பு சிரிச்சாரு கலைஞர். அந்தச் சிரிப்பு இன்னும் ஞாபகம் இருக்கு.
ஒரு பெரிய எழுத்தாளர். கம்யூனிஸ்ட். அவருக்கு தி.க-ன்னா பிடிக்காது. கலைஞர்னா பிடிக்காது. கடுமையா விமர்சனம் பண்ணுவாரு. ஆனா, அவர் வயசான காலத்துல அவரோட சிகிச்சைக்கு கலைஞர்தான் உதவி பண்ணாரு. அந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.

ஒரு தயாரிப்பாளர் கலைஞரோட தீவிர ரசிகன். அவர் கூட ஒரு படம் பண்ணினேன். அந்தத் தயாரிப்பாளர், ‘நம்ம படம் கண்டிப்பா சூப்பர் ஹிட்… கலைஞர் நமக்கு வசனம் எழுதித்தரேன்னு சொல்லிருக்காரு’னு சொன்னாரு. அப்போ நான், கலைஞரோட வசனங்கள் கஷ்டமாக இருக்கும். நான் கலைஞர் வசனம் பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்.

நானே கோபாலபுரம் போய் கலைஞர்க்கிட்ட, ‘உங்க வசனத்தை என்னால பேச முடியாது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்’னு சொன்னேன். அதுக்கு அவர் தயாரிப்பாளரை கூப்பிட்டு, ‘ரஜினி என் வசனம் பேசுறதுக்கு கஷ்டமாக இருக்கும்னு சொன்னாரு. நான் ரஜினிகிட்ட அவருக்குகேத்த மாதிரி எழுதுறேன்னு சொன்னேன். ஆனா, ஷூட்டிங் அடுத்த மாதாமமே. நான் அதுக்கு அடுத்த மாதம்னு நினைச்சேன். நீ வேற யாரையாவது வச்சு வசனம் எழுதிக்கோ’னு அவர்கிட்ட சொன்னார். சொல்லிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சாரு.

ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இந்தியா முழுக்க அவருக்கு அரசியல் தொடர்பு உண்டு. கலைஞரை விமர்சிச்சே பத்திரிகை நடத்துனவரு அவரு. அவர் என்க்கிட்ட ஒரு நாள், ‘கலைஞரை எவ்ளோ விமர்சனம் பண்றேன். ஆனா, எங்க பார்த்தாலும் என்னய்யா எப்படி இருக்கன்னு கேட்குறாரு…’ன்னு நெகிழ்ந்து போய் சொன்னாரு. அவர் பத்திரிகையாளர் மற்றும் என்னுடைய நண்பர் சோ.

ஒரு அரசியல் பொதுக்கூட்டம். ஒரு கட்சிக்காரர், ‘கருணாநிதி நீ என்ன பண்ண’னு கேட்டாரு. உடனே அவரிடம் அந்த கட்சியின் தலைவர், `அவர் பண்ணது உனக்கு என்ன தெரியும். அவரை இனி பெயர் சொல்லி கூப்பிடக் கூடாது. கலைஞர்னு தான் கூப்பிடணும்’னு சொன்னாரு. அது அ.தி.மு.க பொதுக்கூட்டம், அந்த கட்சிld தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

கலைஞருக்கு நெருக்கமான நடிகர் ஒருத்தரு. அவர் கூட உட்கார்ந்து நிறைய படங்கள் ப்ரிமியர் ஷோ பாப்பாரு. ஒருமுறை கலைஞர் வசனம் எழுதிய படத்தைப் போட்டு காட்ட ப்ரிவியூ ஷோ ஏற்பாடு பண்ணிருந்தாங்க. அந்தச் சமயத்துலதான் வாக்குப்பதிவும் நடந்துச்சு. ஓட்டு் போட்ட அந்த நடிகர்கிட்ட யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு பத்திரிகையாளர்கள் கேட்க, அவரோ ‘இரட்டை இலை’ எனப் பதிலளித்துவிட்டார். பத்திரிகைகளில் அது பெரிய செய்தியாகிவிட்டது. இப்போது அந்த நடிகர் கலைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ப்ரிவியூ ஷோவுக்குச் செல்வதில் சங்கடம்.
அதனால் குளிர் காய்ச்சல் எனக் கூறி ப்ரிவியூவுக்குச் செல்லாமல் தவிர்க்க நினைத்தார். சண்முகநாதன் கேட்டபோது அப்படியே சொல்லிவிட்டார். மாலை 6 மணி. வைரமுத்துவிடமிருந்து நடிகருக்கு போன். அவரிடமும் குளிர் ஜுரம் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் நீங்க வந்தாதான் ஷோ என்று கலைஞர் சொல்லிவிட்டதாக வைரமுத்து சொல்ல, வேறு வழியில்லாமல் அந்த நடிகர் தியேட்டருக்கு வந்தார்.

‘என்னங்க… குளிர் காய்ச்சல்னு சொன்னீங்களாம்… சூரியன் பக்கத்துல உட்காருங்க குளிர் போயிடும்’னு சொல்லி கலைஞர் அந்த நடிகர பக்கத்துல உட்கார வச்சாரு. அந்த நடிகர் வேற யாரும் இல்ல. இந்த ரஜினிகாந்த்தான்.

‘உங்களுக்கு ஆண்டவனைப் பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என்று அவரிடமே சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் தன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.” என தன் பேச்சை முடித்தார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *