சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் உருவான மிகப் பெரிய வெற்றிப் படமான எஜமான் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகள் ஆகின்றன.
எஜமான் படம் ஏவிஎம் தயாரிப்பில், ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் உருவானது. உதயகுமார் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட சின்னக் கவுண்டர் படம் பார்த்து, அதே போல ஒரு கிராமத்துக் கதை இருந்தால் சொல்லுங்கள் என ரஜினி விரும்பிக் கேட்டதால் உருவாக்கப்பட்ட கதைதான் எஜமான். முதலில் இந்தப் படத்தின் கதை வேறு. அப்போது சூட்டப்பட்ட தலைப்பு ஜில்லா கலெக்டர். பின்னர் கதை மாற, தலைப்பும் எஜமானாகியது.
இந்தப் படத்தின் நாயகியாக மீனாவை ஒப்பந்தம் செய்ய முயன்றபோது, அதை ஏற்கத் தயங்கினார் ரஜினி. காரணம், அன்புள்ள ரஜினிகாந்தில் குழந்தை நட்சத்திரம், எங்கேயோ கேட்ட குரலில் மகள் வேடத்தில் நடித்த பெண்ணுடன் ஜோடியாக நடிக்கத் தயங்கினார் ரஜினி. ஆனால் மீனாவோ தெலுங்கில் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். சிரஞ்சீவி ஜோடியாக முட்டா மேஸ்திரி படத்திலும் நடித்திருந்தார். இதையெல்லாம் ரஜினியிடம் சொல்லி, மீனாவை ஜோடியாக ஏற்க வைத்தனர் ஏவிஎம்மும் உதயகுமாரும்.
படம் வெளியாகும் முன்பே இளையராஜா இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ராக்கு முத்து ராக்கு பாடலை மட்டும் வாலி எழுதியிருந்தார். மற்ற பாடல்களை இயக்குநர் ஆர்வி உதயகுமாரே எழுதினார் என்றாலும், அவற்றை முழுமையாக திருத்தி எழுதி சரி செய்து கொடுத்தவர் வாலிதான். இதை அவரே பின்னர் ‘வாலி 1000’ நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மொத்தம் 8 பாடல்கள். அனைத்துமே படத்தில் இடம்பெற்றன. 8 பாடல்களுமே பெரும் வெற்றிப் பெற்றன.
பாடல்கள்:
1. எஜமான் காலடி – மலேசியா வாசுதேவன் & குழுவினர்
2. ஆலப்போல் வேலப்போல்… – எஸ்பி பாலசுப்பிரமணியம் – சித்ரா
3. தூக்குச் சட்டிய – மலேசியா வாசுதேவன்
4. ஒரு நாளும் உனை மறவாத… – எஸ்பி பாலசுப்பிரமணியம் – எஸ் ஜானகி
5. அடி ராக்கு முத்து ராக்கு – எஸ்பி பாலசுப்பிரமணியம்
6. இடியே ஆனாலும்… – மலேசியா வாசுதேவன்
7. நிலவே முகம் காட்டு… – எஸ்பி பாலசுப்பிரமணியம் – எஸ் ஜானகி
8. உரக்கக் கத்துது கோழி – எஸ் ஜானகி
ரஜினியின் திரைப்பயணத்தில் அவருக்கு 143வது படம் எஜமான். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த எட்டாவது படம். அவருடன் நெப்போலியன் முதல் முறையாக வில்லனாக இணைந்த படம் இது. கவுண்டமணி – செந்தில், விஜயகுமார், மனோரமா, நம்பியார், ஐஸ்வர்யா பலரும் நடித்திருந்தனர்.
1993, பிப்ரவரி 18-ம் தேதி உலகெங்கும் மிகப் பெரிய அளவில் வெளியானது எஜமான். ஆனால் ஆரம்ப வாரத்தில் படம் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் போகப்போக மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இந்த கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஏவிஎம்மின் விளம்பர உத்தி அமைந்தது. வானவராயன் – வைத்தீஸ்வரி ஜோடிப்பொருத்தம் பற்றிய போட்டிகள், இலவச திருமணங்கள் என தமிழ்த் திரையுலகம் கண்டிராத புதுமையான விளம்பரங்களைச் செய்தது ஏவிஎம். இன்னொரு பக்கம் இளையராஜாவின் தேன் சொட்டும் பாடல்கள் மக்களை திரையரங்குகளை நோக்கி இழுத்தன என்றால் மிகையல்ல. அன்றைக்கு ஒற்றைத் திரை அரங்குகள் அதிகம் இருந்தன. குறிப்பாக கிராமங்களை ஒட்டிய பகுதிகளில். தொலைக்காட்சி தாக்கம், செல்பேசிகள் இல்லாத சூழலில் வெளியான எஜமானுக்கு, கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிட்டியது.
பல அரங்குகளில் தொசர்ந்து 10 வாரங்கள் வரை நிறைந்த காட்சிகளாகவே ஓடிய படம் எஜமான்தான். தமிழகத்தில் மட்டும் 64 அரங்குகளில் 50 நாள் விழா கண்ட எஜமான், 46 அரங்குகளில் 75 நாட்கள் ஓடியது.
26 அரங்குகளில் நூறுநாட்களும், பால அபிராமி, பேப் ஆல்பட்டில் 25 வாரங்கள் கடந்து வெள்ளி விழாவும் கண்ட படம் எஜமான். இந்தப் படத்தை விட மிகப் பெரிய வசூல் படங்களை ரஜினி கொடுத்திருந்தாலும், அவரது திரையுலகப் பயணத்தில் இத்தனை அரங்குகளில் நூறு நாட்கள் கண்ட முதல் படம் எஜமான்தான்.
இந்தப் படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறுகையில், “ஏவிஎம் தயாரிப்பில் ஒரு மரியாதைக்குரிய படமாகத் திகழ்கிறது எஜமான். அந்தப் படம் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முக்கியக் காரணம் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜாவின் இனிய இசை. அத்துடன் எங்கள் நிறுவனத்தின் விளம்பர உத்திகள். வசூல், திரையரங்க வரலாற்றில் பல முதல் சாதனைகளை நிகழ்த்தியது எஜமான்தான். ரொம்ப மகிழ்ச்சியான அனுபவங்களைத் தந்தது எஜமான்,” என்றார்.
பூந்தமல்லி பகவதி திரையரங்கில்தான் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். தொடர்ந்து 6 நாட்கள் தினசரி பிற்பகல் காட்சி பார்த்த படம் இது.
– வினோ