பொங்கலுக்காக தங்கள் படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி கோரினர். அடுத்த இரு தினங்களில், அதற்கான அனுமதியை அளித்துவிட்டது எடப்பாடி அரசு. ஆளுக்கொரு சங்கம் என அணி வகுத்து நிற்கும் தயாரிப்பாளர்கள் உள்பட திரைத்துறையினர் பலரும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர், ஒரு உண்மை புரியாமல் அல்லது தெரியாமல். இப்போது கொரோனா தொற்று அவ்வளவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தடுக்கப்பட்ட பகுதிகளில் கூட முழு தளர்வு உள்ளது என்பதே உண்மை. யாரும் கண்டுகொள்வதில்லை.
உண்மையில் கொரோனா தொற்று அபாயம் இப்போதும் அதிகம் உள்ளதாகவே சுகாரதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதே தேவையற்றது. 50 சதவீத பார்வையாளர்கள் என்ற நிபந்தனை இருந்தபோதே பல அரங்குகளில் எந்த பாதுகாப்பு நடைமுறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. படம் பார்க்க வந்தவர்களில் பலர் குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணியவில்லை. சூர்யா, ஜெயம் ரவி போன்றவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். மாஸ்டர், ஈஸ்வரன் படங்களை பொங்கல் தினங்களில் முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் பார்க்க வேண்டும் என ஆசைப்படும் அந்தப் படத்தின் நாயகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், அந்த ரசிகர் கூட்டத்துடனே முதல் இரு தினங்கள் தங்கள் படங்களை திரையரங்குகளில் பார்ப்பார்களா?
ஏதோ விஜய்யும் சிம்புவும் தியேட்டர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவர்களைப் போல, அவர்களது ஆதரவுப் பத்திரிகையாளர்கள் சிலர் எழுதி வருவதைப் பார்க்க முடிகிறது. இதுவும் தவறுதான். திரையரங்கக் காதலர்களை நோயில் வீழ்த்தும் வழியாகவே மாஸ்டர், ஈஸ்வரன் மாஸ் ரிலீஸ் முடிய வாய்ப்பிருக்கிறது.
இந்தப் படங்களை விட உடல்நிலை முக்கியம் என்பதை மக்கள் உணரவேண்டும். ‘அண்ணாத்த’யாகவே இருந்தாலும், தலைவர் ரஜினி கூட இந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பார்!
– எஸ்எஸ்