முதல்வர் மருமகனைச் சந்தித்தாரா ரஜினிகாந்த்?
கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் ஒரு புகைப்படம் திரும்பத் திரும்பப் பகிரப்பட்டு, ‘ரஜினி – சபரீசன் திடீர் சநதிப்பு,.. பின்னணி என்ன?’ என்று செய்திகள் வந்து கொண்டுள்ளன.
தங்களை நம்பர் ஒன் செய்தித் தளம் என்று சொல்லிக் கொள்ளும் சில இணையதங்கள், இந்தப் படத்தை வெளியிட்டு விரிவாக கதைகள் எழுதியுள்ளன.
எந்த அளவு செய்திப் பஞ்சத்தில் அடிபட்டுப் போயிருக்கிறது ஊடகத் துறை… எதையும் விசாரிக்காமலேயே, குறைந்தபட்சம் யோசிக்கக் கூட முயற்சிக்காமல் கிடைத்ததை செய்தியாகப் போட்டு காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதற்கு இது இன்னொரு சான்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை 2.0 படப்பிடிப்பில் சந்தித்துள்ளனர் சபரீசன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட குழுவினர். அப்போது எடுத்த புகைப்படத்தைத்தான் இப்போது பதிவிட்டு, ரஜினி – சபரீசன் சந்திப்பு என்று செய்தியாக்கியுள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே போய், ஆளுநரைச் சந்தித்த ரஜினி இப்போது சபரீசனைச் சந்தித்திருப்பது பாஜக – திமுக அரசியல் பாலம் அமைக்கத்தான் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். நடக்காத சந்திப்புக்கு எத்தனை விளக்கவுரை, பொழிப்புரைகள்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் தந்தை பெரியார். இன்றைய ஊடகத் துறையினருக்கு அவை இல்லாமல் இருப்பதுதான் அழகு போலிருக்கிறது!