சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்து மீடியாக்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளன.
ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் அவரது 169வது படமாகும். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. இப்போது அதில் மாற்றம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேசிங் பெரியசாமியிடம் கேட்டபோது, “தலைவருக்காக கதை தயார் செய்திருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் இன்னும் நான் அவரைச் சந்திக்கவே இல்லை. மீடியாக்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையானால் எனக்கும் சந்தோஷம்தான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்,” என்றார்.
இதற்கிடையே, இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
தீவிர ரஜினி ரசிகரான தேசிங்குக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் படமாகும். அந்தப் படத்தின் திரைக்கதைப் புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்து ஆசி பெற்ற பிறகே அவர் படப்பிடிப்புக்குச் சென்றார். படம் வெளியான சில தினங்கள் கழித்து, ரஜினியிடமிருந்து தேசிங்குக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது படத்தைப் பற்றி பெரிதாகப் பாராட்டிய ரஜினி, “எனக்கும் பொருத்தமான கதை இருந்தா சொல்லுங்க தேசிங்” என்று கேட்டது, அன்றைக்குப் பெரிய அளவில் வைரல் செய்தியானது. முதல் படம் இயக்கி முடித்த ஒரு இளம் இயக்குநர், அதுவும் தனது ரசிகருக்கே அடுத்த பட வாய்ப்பை ரஜினிகாந்த் வழங்கவிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதும் பாராட்டப்படுகிறது.