கேள்வி: ‘நந்தவனத்தில் ஒர் ஆண்டி…’ பாடல் மாதிரியாகிவிட்டதே தலைவர் ரஜினி அரசியல். உங்கள் பார்வை என்ன? ஏன் இந்த விஷயத்தில் உங்களைப் போன்ற தீவிர ரசிகர்கள் மவுனம் காக்கிறீர்கள்? (நண்பர்கள் பலரது கேள்வி இது)
பதில்: தலைவர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை இன்று நேற்றல்ல… 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக ரஜினியின் அரசியல் நகர்வுகளை முடிந்தவரை முன்கணித்தும் எழுதி வந்திருக்கிறேன்.
தனது அரசியல் வருகை குறித்து ரஜினி் வெளிப்படையாக அறிவிக்கும் வரைதான், அவரது ஒவ்வொரு பேச்சுக்கும், அறிக்கைக்கும், செய்கைக்கும் பல்வேறு அர்த்தங்களை, குறியீடுகளைத் தேடிக் கொண்டிருந்தோம். அவர் வெளிப்படையாக கடந்த 2017ல் அரசியலுக்கு வருவதாக அறுதியிட்டுக் கூறிய பிறகு, இதுபோன்ற தேடல்கள், யூகங்களுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
அவரது அறிவிப்பு ரொம்பத் தெளிவானது. ‘வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வருகிறேன். என்னுடைய வருகை சாதாரணமாக இருக்கக் கூடாது… வந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும். ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக, சாதி சமயமற்ற, ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் வகையிலான நேர்மையான நல்லாட்சியை, எம்ஜிஆரைப் போல தருவேன்’ என்று பளிச்சென்று அறிவித்தவர் ரஜினி. ஆனால் அவர் எதிர்ப்பார்த்த பல விஷயங்கள் சாதகமாக நடக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பு, காவலர்களின் முனைப்பு – செயல்பாடுகள், தமிழக அரசியல் களம் என பல்வேறு விஷயங்களில் அவருக்கு முழுமையான திருப்தி வரவில்லை என்பதே உண்மை. இந்த நேரத்தில் கொரோனா எனும் கொடுமை உலகையும் அவர் உயிரையும் அச்சுறுத்த, தனது அரசியல் பயணத்துக்கே முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டார் ரஜினி.
கொரோனா, உடல் நிலை போன்றவை ரஜினியின் அரசியல் முழுக்குக்கு வெளிப்படையான காரணங்கள். தேர்தல் களத்துக்கு வந்தால், இப்போதுள்ள கட்டமைப்பு, சூழல், அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றி சந்தேகம்தான் என்ற கள யதார்த்தம் அவரது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. மார்ச் 12 லீலா பேலஸ் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு சில நண்பர்களிடம் இந்தக் கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.
ரஜினியின் இந்த முடிவுக்கு இன்னொரு முக்கிய காரணம் பாஜகவின் நெருக்குதல்களாகவும் இருக்கக் கூடும் என்ற கோணத்தையும் ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் பாஜகவை தோளில் சுமக்கும் துரதிருஷ்டம் அதிமுகவோடே போகட்டும் என்ற எண்ணத்தில்கூட ரஜினி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
ஆனால் வெளிப்படையாக, உறுதியாக ‘அரசியல் பற்றி இனிப் பேச வேண்டாம். தேர்தல் அரசியலை விடுத்து, ரஜினி மக்கள் மன்றம் மூலம் மக்களுக்கு நற்பணிகள் தொடரும்’ என்று தலைவர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். அவரது முடிவு தெளிவானது, இறுதியானது. அதில் உள்ளர்த்தம் தேடிக் கொண்டும், திரும்பத் திரும்ப வெவ்வேறு தேதிகளை குறித்துச் சொல்லி அதிசயம் அற்புதம் நடக்கும் என ஜோசியம் சொல்லிக் கொண்டிருப்பதும் தேவையற்றது.
என்னைப் போன்றவர்களுக்கும் பெரிய ஏமாற்றம்தான். ஆனால் ரஜினி முடிவில் உள்ள யதார்த்தமும், தொலைநோக்கும் எந்தத் தலைவரும் யோசிக்காதவை. நேர்மையானவை. பெரிய எதிர்ப்பார்ப்புகள், பதவி ஆசைகளோடு அவரது அரசியலை எதிர்நோக்கியவர்களுக்கு வேண்டுமானால், இது நந்தவனத்து ஆண்டி கதையாகத் தெரியும். நமக்கல்ல!
அவர் முடிவை முழுமையாக ஏற்போம். தலைவர் எவ்வழி, நாமும் அவ்வழி… இந்தப் பிறவியில் இனி வேறு யாரையும் தலைவர் என அழைக்க மாட்டோம். என்றும் ஒரே தலைவர் ரஜினிதான்!
https://envazhi.jakathalaya.com/rajinikanth-wont-start-new-party/
– வினோ