ரஜினியை நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு, முக ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள்!

ரஜினியை நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு, முக ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள்!

ஹைதராபாத்: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும், சென்னை திரும்பாமல் ஹைதராபாத்திலேயே ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

22-ம் தேதி ரஜினிகாந்துக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.

ரத்த அழுத்த அளவில் மாறுபாடு மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன,” என தெரிவித்துள்ளது.

முக ஸ்டாலின்

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்தார். சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். .

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரப்பாபு நாயுடு, “நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து கவலை அடைந்தேன், ரஜினிகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என கூறியுள்ளார்.

நடிகர் பவன் கல்யாண், “ரஜினிக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி, ரஜினிகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நண்பர் விரைவில் நலம்பெற வாழ்த்துகள் @rajinikanth என்று நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். .

– என்வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *