பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.
கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்றுப் புதினம் பல்வேறு காலகட்டங்களில் நாடகங்களாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அமரர் எம்ஜிஆர் தனது நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு, பொன்னியின் செல்வனை மிகப் பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டு, அதற்கான திரைக்கதை அமைப்பு வேலைகளுக்காக இயக்குநர் மகேந்திரனை நியமித்தார். அவரும் திரைக்கதை எழுதி முடித்தார். ஆனால் அப்போது பல காரணங்களால் இந்தக் கதை திரைப்படமாக உருவாகவில்லை. பின்னர் நடிகர் கமல் ஹாஸன் படமாக்க முயன்று முடியாமல் போனது.
இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார். முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.
‘பொன்னியின் செல்வனை எத்தனைப் பேர் படித்திருப்பார்கள்? கிட்டத்தட்ட 2500 பக்கங்கள்… அவ்வளவு பக்கங்களையும் இந்தத் தலைமுறை படித்திருக்குமா? எனவே அந்தக் கதையை எப்படி எடுத்தாலும் யாரும் பெரிதாக கவலைப்படப் போவதில்லை’ என்று சிலர் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ, குறிப்பாக ‘2கே கிட்ஸ்’ எனும் ஈராயிரக் குழவிகள், ‘இந்த நாவலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், செய்திகள் படித்துமிருக்கிறோம்… ஆனால் கதையை முழுமையாகப் படிக்கவில்லை. நேரமில்லை..’ என்று தெரிவித்திருந்தனர்.
ஒரு சிலர் பொன்னியின் செல்வனை சுருக்கி, சிறு நாவலாகத் தரும் முயற்சியில் கூட இறங்கியிருக்கின்றனர். இந்த ஆர்வம் பாராட்டுக்குறியது என்றாலும், கல்கியின் அபாரமான எழுத்தாற்றல், கற்பனை வளமிக்க காட்சியமைப்புகளை அனுபவிக்க வேண்டும் என்றால் 5 பாகங்களையும் முழுமையாகப் படித்தே ஆக வேண்டும். அது தரும் இன்பமும் சுக அனுபவமும் வேறு எதுவும் தராது.
எனவே கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை என்வழி தளத்தில் தொடராக வெளியிடுகிறோம். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன், 5 பாகங்களையும் தொடராக வெளியிட்டிருந்தோம். ஆனால் இடையில் என்வழி இணையதளம் செயல்படாமல் இருந்த சில மாதங்களில், அதிலிருந்த கட்டுரைகள், தொடர்கள், பேட்டிகள் அனைத்தும் சேமிக்கப்படாமல் அழிந்து போயின.
இப்போது மீண்டும் என்வழியில் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் படம் வெளியாகும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், பொன்னியின் செல்வனின் முதல் பாதிக் கதையை வெளியிடும் முயற்சி இது. ஆர்வமுள்ளோர் படித்து இன்புறவும். நன்றி.
- வினோ
முதன்மை ஆசிரியர்.