சென்னை: மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏஆர் ரகுமானின் ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார்.
அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், மெய்நிகர் உண்மை என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மெய்நிகர் உண்மை மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளைக் கொடுக்கும் உத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Check who is watching @lemuskXperience #superstarrajinikanth pic.twitter.com/xIDKYDQipG
— A.R.Rahman (@arrahman) November 30, 2022