ஏனென்றால் அவர் ரஜினி…!

ஏனென்றால் அவர் ரஜினி…!

பாபா ஒரு தோல்விப் படம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அன்றைய டாப் ஹீரோக்களின் ப்ளாக்பஸ்டர் படம் 20 கோடி வசூல் என்றால் பாபாவும் அதே வசூலை எடுத்தது. ஆனால் ரஜினி என்ற தரத்திற்கு அது தோல்வி. கலெக்‌ஷனை ஒரு புறம் தள்ளி வைத்துவிடுவோம். ரஜினி சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி 4 படம் கொடுத்திருக்கிறது. அதில் 2 படம் வெற்றி என்ற சொல்லுக்கான இலக்கணங்கள். தமிழ் சினிமாவில் மாஸ் மசாலா திரைப்படங்களுக்கான பார்முலாவே இந்த 2 படங்கள்தான். வீரா ரீமேக் படம். அவர்களாக பேசி வைத்து செய்தது. நான்காவது பாபா.. இதில் 3 படங்கள் ரஜினியின் ஒன்லைன் தான் படங்களானது. படையப்பாவும் ரஜினியின் ஒன்லைன் தான். நமக்கு இது வொர்க் அவுட் ஆகும், நம் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்று யோசித்து செய்த படங்கள் தான். அதில் ஒன்றே ஒன்றுதான் சறுக்கியது.

படம் வெற்றி பெற்றால் உடன் சேர்ந்து கொண்டாடுவோம். தோல்வி என்றால் தள்ளி நின்று விமர்சனம் செய்வோம் என்பது ஒரு ரசிகனுக்கான மனநிலையாக இருக்க முடியாது. ரஜினி என்பவர் ஒவ்வொரு ரசிகனின் வாழ்க்கையில் ஒரு அங்கம். ஒர் உறவைப் போல, நண்பனை போல. வெற்றி வரும் போது கொண்டாடுவதும், தோல்வி வரும் போது தோளோடு தோள் சேர்த்து நிற்பதுவே ஒரு நல்ல உறவுக்கு, ஒரு நல்ல நட்புக்கு அழகு. தோல்வியில் விலகிச் செல்பவர்களுடன் நம்மால் உற்வாகவோ, நட்பாகவோ இருக்க முடியுமா. ரஜினியும் அப்படியே… இத்தனைக்கும் அவரின் தோல்வி சதவிகிதம் மிக மிக குறைவு. நம் வாழ்நாள் முழுவதும் கொண்டாடி களிப்பதற்கான தருணங்களை அவர் எப்போதோ கொடுத்து முடித்துவிட்டார். இப்போது கிடைப்பதெல்லாம் போனஸ்.

அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா படங்கள் வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தவர் தான் பாபாவையும் யோசித்தார். அவரே தான் பின்னாளில் சந்திரமுகியை தேர்வு செய்தார். அவரே தான் இன்று பாபா ரிலீஸ் ஆனால் வொர்க் அவுட் ஆகும் என்று முடிவெடுத்திருக்கிறார். இந்தப் படம் ஜெயித்து 100 கோடி, 200 கோடி கலெக்‌ஷன் செய்ய வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி ஒன்று நடக்கப் போவதில்லை. இது ரஜினிக்கும் தெரியும். ஆனாலும் ரஜினி தன் உள்ளுணர்வுப் படி நடக்கிறார். 20 வருடங்களுக்கு முன் வந்த ஒரு தோல்விப் படத்தை பற்றி இன்றைய ட்ரெண்டிங்கில் பேச வைத்ததே சாதனை தான். அங்கேயே ரஜினி ஜெயித்து விட்டார் என்று சொல்லவேண்டும்.

இன்று சோஷியல் மீடியாவில் நம்மில் பலருக்கும் அறிவுஜீவி முகம் இருக்கிறது. அதை தக்கவைத்துக் கொள்வதற்காக என்னென்னவோ செய்கிறோம். வீட்டில் பயபக்தியோடு சாமி கும்பிட்டுவிட்டு பேஸ்புக்கில் முற்போக்கு பேசுவது இன்றைக்கு பேஷன். இன்றைக்கு அரசியல் நிலைப்பாடுகளும் மாறிவிட்டன. அதற்காக ரஜினியை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை என்பதே என் நிலைப்பாடு. நம்முடைய அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள், சித்தாந்தங்கள் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதை மறுக்க முடியாது. நம்முடைய இன்றைய நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டில் தான் நாம் கடந்த காலங்களில் இருந்திருக்கிறோம்.

நிலையில்லாத, மாறுதலுக்கு உட்பட்ட சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் நம் கையில் வைத்துக் கொண்டு அதில் பிட்டாகவில்லை என்பதற்காக, அவரை விமர்சனம் செய்கிறோம். அங்கே தான் மாற்றுக் கருத்து சொல்ல வேண்டிய தேவை வருகிறது.

ரஜினியை விமர்சிக்கக் கூடாதா? கேள்வி கேட்கக் கூடாதா என்றால் தாராளமாக கேட்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் ரஜினி பிடிக்காத, வெறுக்கக்கூடிய, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை முன்னிறுத்தி விமரசனம் செய்யும் நபர்களுடன் சேர்ந்து கொண்டு ரசிகர்களும் செய்வதை விமர்சித்துத் தான் ஆகவேண்டும்.

ஒருவேளை உங்களுடைய அரசியல் நிலைப்பாடும், கொள்கையும், சித்தாந்தமும், அறிவுஜீவி பிம்பமும் தான் உங்களுக்கு முக்கியம் என்றால், ரஜினியின் ரசிகன் என்று சொல்வதை விட்டுத் தள்ளுங்கள்.

பாபாவின் தோல்விக்கு பின்னரும் சரி, அவரின் அரசியல் முடிவுக்குப் பின்னரும் சரி, ஒவ்வொரு சராசரி ரசிகனின் மனநிலையும், “பரவால்ல விடு தலைவா.. பார்த்துக்கலாம்,” என்பதாகத்தான் இருந்தது. எப்போதும் இருக்கும். குற்றம் குறைகள் அனைவருக்கும் பொதுவானது. ரஜினியும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் குற்றம் குறைகளை தாண்டி வியந்து பார்ப்பதற்கும், போற்றுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும் ரஜினியிடம் நிறைய இருக்கிறது.

ஏனெனில் அவர் ரஜினி…!

 

மகாதேவன் சிஎம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *