மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!

மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 40 சதவீதம் முடித்து விட்டனர். ஊரடங்கை தளர்த்தியதும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தனர். ரஜினிகாந்த்துக்கும் கொரோனா சோதனை நடந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அவருக்கு சீரற்ற ரத்த அழுத்தம் நிலவியதால், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். பின்னர் சென்னை திரும்பினார். புதிய அரசியல் கட்சி தொடங்கவிருந்தவர், உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வர மறுத்துவிட்டார் அதன்பிறகு ரஜினி வீட்டிலேயே இருந்து வருகிறார். செய்தியாளர்களைச் சந்திக்கவோ, வேறு எந்த தகவலையும் தரவோ அவர் தயாராக இல்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்புக்கு ரஜினிகாந்த் தயாராகி இருக்கிறார். இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

வட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டு இருந்தார். அதனை ரத்து செய்து விட்டு மீதி உள்ள அனைத்து காட்சிகளையும் ஐதராபாத்திலும் சென்னையிலும் படமாக்க முடிவு செய்துள்ளார். அண்ணாத்த தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

இந்த படத்தை முடித்து விட்டு ஏற்கனவே தன்னை வைத்து பேட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது பேட்ட 2-ம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *