காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு என காந்தாரா படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த், அதன் இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்து வாழ்த்தினார்.

கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா முழுமைக்குமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ஒரு வாரம் கழித்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படத்தை வெளியிட்டனர்.

மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் வேட்டை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் இந்தியில் தீபாவளிப் படங்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டது காந்தாரா. வெளியாகி 10 நாட்கள் கழித்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு காந்தாரா திரைப்படம் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம், என்பதை சினிமாவில் இதை விட யாரும் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. இப்படம் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பு. காந்தாரா படத்தை எழுதி இயக்கி, நடித்த அசத்தியுள்ள ரிஷப் ஷெட்டிக்கு எனது பாராட்டுகள். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்,” என்று கூறியிருந்தார்.

இதைவிட சிறந்த அங்கீகாரம், பாராட்டு எதுவுமில்லை என ரிஷப் ஷெட்டி மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், ரிஷப் ஷெட்டியை தன் வீட்டுக்கே அழைத்து பாராட்டி வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினியை தான் சந்தித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, “ரஜினிகாந்த் சார், நீங்கள் ஒரு முறை பாராட்டினால் அது 100 முறை பாராட்டியதற்குச் சமம். கன்னட சினிமாவை தொடர்ந்து பார்த்து ரசித்துப் பாராட்டி வரும் உங்களுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்களான ஹம்போலே பிலிம்ஸ் ரஜினி – ரிஷப் ஷெட்டி சந்திப்பின்போது எடுத்த படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “குருவும் சீடரும் படம் குறித்து ஆழமாகப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *